ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் போட்டி இடுகிறது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு மாநிலம் இரு யூனியன் பகுதிகளாக கடந்த ஆகஸ்ட் மாத்ம் பிரிக்கப்பட்டது.   அப்போதிருந்து அங்கு மிகவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.    முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.    பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.    முடக்கப்பட்ட தொலைத் தொடர்பு மற்றும் இணையச் சேவைகள் இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை.

இந்த நடவடிக்கைகளுக்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  வீட்டுக் காவலில் உள்ள அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டும் எனவும் கட்சியின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த கட்டுப்பாடுகளின் இடையே வரும் 24 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளன.   இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.   கடந்த இரு மாதங்களாக அரசியல் கட்சிகள் மிகவும் ஓய்ந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து காஷ்மீர் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரவீந்தர் ஷர்மா, “தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தின் மீது கொண்ட பேரார்வத்தால் போட்டியிட உள்ளது.   தற்போது 12052 உள்ளாட்சி தொகுதிகள் காலியாக உள்ளன.   இந்த தொகுதிகளில் கட்சி போட்டியிட உள்ளன.

இந்த முடிவை காங்கிரஸ் மேலிடத்துடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு நாங்கள் எடுத்துள்ளோம்.   இதற்கு தற்போது சந்திக்க முடிந்த மூத்த தலைவர்களும் ஒப்புதல் அறிவித்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.  அப்போது அவருடன் கட்சியின் பொதுச் செயலர்கள் யோகேஷ் சானே, மன்மோகன் சிங் மற்றும் பொருளாளர் ரஜனிஷ் சர்மா உடன் இருந்தனர்.