சென்னை

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்களின் போராட்டம் தொடர்கிறது.

பேருந்துக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டதை கண்டித்து தமிழகம் எங்கும் நேற்று 2-வது நாளாக பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தலைநகர் சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்குன்றத்தை அடுத்த காந்திநகரில் இந்திய மாணவர் சங்கமும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதே போல சென்னையில் பல இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தை திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் தக்கலை, ஈரோடு மாவட்டம் கோபி ஆகிய இடங்களில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சத்தியமங்கலத்தில் மறியலில் ஈடுபட்ட அக்கட்சியினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே வெள்ளோட்டில், பேருந்துக் கட்டணம் உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2 பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடுதல் கட்டணம் கேட்டதால், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பேருந்து நிலையத்தில் நடத்துனரைக் கத்தியை காட்டி மிரட்டியதால் ஒரு வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விறகு வெட்டும் தொழிலாளியான அந்த வாலிபர், முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பயணச் சீட்டுக்கு பணம் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கி பணப்பையை பறித்து சென்ற தொழிலாளியை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பா.ஜனதா சார்பிலும், பரமத்திவேலூரில் தமிழ்புலிகள் கட்சி சார்பிலும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பிலும்,  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இளைஞர் காங்கிரஸ் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேருந்துக் கட்டண உயர்வை கண்டித்து கும்பகோணத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.   அத்துடன் பட்டுக்கோட்டை அருகே கரம்பயம் கத்திரிக்கொல்லை சாவடியிலும், திருவையாறு அடுத்த மேலத்திருப்பூந்துருத்தியிலும் பொதுமக்கள் திரண்டு சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது