சென்னை,

சிகலா முதலமைச்சராவதை மக்கள் விரும்பவில்லை  என்று  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி அளித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த தீபா கூறியதாவது,

சசிகலா முதல்வரானது தமிழ்நாட்டுக்கு மிக மோசமான நாள் என்றும், கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர் என்று கூறினார்.

அதிமுக தொண்டர்களிடையே எனக்கு அதிகளவில் ஆதரவு உள்ளது . மேலும், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, எனக்கு அவரை  பார்க்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

சசிகலா அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழல் உருவாகி வருகிறது.

அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாது, அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பு தொற்றியுள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து ராஜினாமா செய்து வருகிறார்கள்.

இந்நிலையில்,  அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான பிஎச் பாண்டியன், அவரது மகன் மனோஜ் பாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது அடுக்கடுக்கான அதிர்ச்சி குற்றச்சாட்டுகளை கூறினர்.

அதைத்தொடர்ந்து அதிமுக மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன் ஆகியோர் பி.எச்.பாண்டியன் கேள்விக்கு பதில் அளித்தனர்.

இதற்கிடையில் தற்போது, ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா தற்போது பேட்டி அளித்து வருகிறார்.

அதிமுக தொண்டர்கள் ஒரு பிரிவினர் இவரை ஆதரித்து வரும் நிலையில்,  ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதியன்று முக்கியமான அறிவிப்பை வெளியிடுவேன்; நான் அரசியலில் இறங்குவது உறுதி என்றும் கூறி உள்ளதார்.

மேலும்  ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் அளித்த விளக்கம் போதுமானது அல்ல என்றார் தீபா.