டெல்லி: மக்கள் விரோத 3வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, உத்தரபிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஜிலேபியுடன் கொண்டாடி வருகின்றனர்.
விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்ததுடன், டெல்லி எல்லைப்பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர். மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக மன உறுதியுடன் கடந்த ஒரு வருடமாக போராடி வரும் விவசாயிகளின் வெற்றி என்று புகழப்படுகிறது.
இதையடுத்து, டெல்லி-காசிப்பூர் எல்லையில் முகாமிட்டு போராடி வந்த விவசாயிகள் சுடச்சுட ஜிலேபி தயாரித்து, அதை மற்றவர்களுக்கு வழங்கி தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர். காஜிபூர் எல்லையில் விவசாயிகள் “கிசான் ஜிந்தாபாத்” கோஷங்களுடன் கொண்டாடினர்.