ஈரோடு:  மக்களை அடைத்து வைத்து அடிமைப்போல் நடத்துகின்றனர். அதனால் இடைத்தேர்தலை நிறுத்த வேண்டும் தேமுதிக பொருளாளர் பிரமேலதா கூறினார்.

இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்ப றக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 77பேர் களத்தில் இருந்தாலும், காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி மட்டுமின்றி, திமுக அமைச்சர்கள் குழு அங்கு முகாமிட்டு பணியாற்றி வருகிறது. அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக எடப்பாடி தரப்பினரும், பாஜகவினUம் வாக்கு வேட்டையாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக பிரேமலாதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.  அப்போது பேசிய அவர்…திருமகன் ஈவேரா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு தொகுதி தேமுதிகவிற்கு ஒன்றும் புதிதல்ல. 2011ல் தேமுதிக வென்ற தொகுதி இது. பெரியார் மண்ணில் தான் கட்சி துவங்கப்படும் என கேப்டன் தெரிவித்தார். ஈரோட்டில் இலவச மருத்துவமனை அமைத்து மக்கள் சேவையாற்றியவர் கேப்டன் என்று கூறியவர்,

திமுக ஆட்சியில் மின் கட்டணம், சொத்துவரி, நூல் விலை, பால் விலை என அடிப்படை பொருட்களின் விலையெல்லாம் உயர்ந்துள்ளது தேர்தலையொட்டி துறை சார்ந்த பணிகளை விட்டு விட்டு அமைச்சர்கள் ஈரோட்டில் முகாமிட்டுள்ளனர்.  ஈரோட்டில் திமுகவினர், மக்களை அடைத்து வைத்து அடிமைப்போல நடத்துகின்றனர். பூத்திற்கு ஒரு அமைச்சர் இருந்து வாக்கு சேகரிக்கின்றனர். வாக்குக்கு பணம் கொடுக்க வந்தவர்கள், தேர்தலுக்கு முன்பு நன்மை செய்ய யாரும் வரவில்லை. மக்களை ஆடு மாடு போல்  ஆங்காங்கே வீடுகள் மற்றும் குடோன்களில் அடைத்து வைத்துள்ளனர்.  இது தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லையா?

 தேர்தல் ஆணையம் ஈரோடு கிழக்கிற்கு  நேரில் வந்து, மக்களை அடிமை போல் நடத்துவதை  பார்த்து தேர்தலை நிறுத்த வேண்டும். ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றாத நிலையில், முன்னேற்றமே இல்லாமல் மக்களை வஞ்சிக்கும் அரசுதான் உள்ளது.

மக்கள் பிரச்னையை பற்றி பேசாமல் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி சாடிக் கொள்கின்றன. பொய் வாக்குறுதிகளை கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்தத் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் என்னென்ன நல்ல திட்டங்கள் இருந்ததோ அதையெல்லாம் திமுக ஆட்சியில் நிறுத்தி விட்டார்கள். மக்கள் சிந்தித்து தேமுதிக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும், முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு பேசினார்.