சென்னை: திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம், திருமண நிதியுதவி திட்டம், காவல்துறை பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓதுவார்கள், அர்ச்சகர்கள், இசைக்கலைஞர்கள், வேத பாராயணர் கள், அரையர்கள், திவ்வியபிரபந்தம் பாடுவோர் மற்றும் அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியத்தை 1000 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி, உயர்த்தப்பட்ட ஓய்வூதியத் தொகையை பயனாளிகளுக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதைத்தொடர்ந்து,  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதைக் கடந்து ஓய்வு பெற்ற கிராமக்கோயில் பூசாரிகள் ஓய்வூதியத்தை 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாக உயர்த்தி, பயனாளிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தொடர்ந்து,  சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 2,900 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவித் தொகையுடன் 8 கிராம் தங்க நாணயத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

அத்துடன்,  2022 பொங்கல் திருநாளையொட்டி 3186 தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார்.