சென்னை: புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையில், நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்று 679 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமை  அமைச்சர் மா.சுப்பிரமணியன்   தொடங்கி வைத்தார்.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மக்கள் நல்வாழ்வுத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் ஒருங்கிணைந்து மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த அக்டோபர் 23ம் தேதி தொடங்கி தற்போது வரை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் முகாம் 1000 என்று அறிவிக்கப்பட்டு 2000-த்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது.

தற்போது சென்னை புயல் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 679 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது.  புயல் பாதித்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகளவில் முகாம்கள் நடத்தப்படுகிறது.   தமிழ்நாடு முழுவதும் 3,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் இன்று நடைபெறுகின்றன.

இந்த மருத்துவ முகாமை சென்னையில்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்ததார். சைதாப்பேட்டையில் உள்ள வடகிழக்கு பருவமழை சுகாதார முகாமில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர்  மா.சு.இ மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றவர், இதுவரை நடைபெற்ற 6 வார முகாம்களில் 13,374 மருத்துவ முகாம்கள் நடந்துள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவ முகாம்கள் மூலம் பயனடைந்து உள்ளனர் என்றார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களை சந்தித்தோம். மக்கள் முகத்தில் கோபம் தெரியவில்லை என கூறியவர், எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டிவிட்டு வீடியோவாக வெளியிடுகிறார்கள். இயல்பை விடவும் அதிகமான மழை பெய்து இருப்பதாக வானிலை மையமே அறிவித்துள்ளது. . எதிர்க்கட்சிகள் மழை, புயல் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்கள் ரூ.4000 கோடி என்னாச்சு என்ற கேளவிக்கு,  சென்னை வடிகால் பணிகளுக்காக ரூ.4000 கோடி செலவு செய்தது எப்படி எனவும் விவாதிக்க தயார் எனவும் தெரிவித்தார்