சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பகல் கனவு காண்கிறார், தனியாருக்கு சாதகமாக செயல்படுகிறார், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் நிறுவனத்தலைவர் பொன்னுசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, பல இடங்களில் பொதுமக்களுக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. பொதுமக்களுக்கு செல்ல வேண்டிய பால் வண்டிகளை, அமைச்சர்களும், அதிகாரிகளும், நிவாரண முகாம்களுக்கு எடுத்துச்சென்றதால் சாமானிய மக்களுக்கும், மழை வெள்ளத்தில் தத்தளித்த குடும்பத்தினருக்கும் பால், தண்ணீர் உள்பட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால், பொதுமக்கள் ஆவேசமடைந்து பல இடங்களில் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், திமுக அரசை கடுமையாக சாடினர்.

இந்த நிலையில், தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பால் முகவர்கள் தொழிலாளர்கள்  சங்கத்தலைவர்  சு ஆ. பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய தாக்கத்தினால் மட்டுமல்ல, நிர்வாக சீர்கேடுகளாலும், ஊழல், முறைகேடுகளாலும் ஏற்கனவே நிலை குலைந்து, சீர்குலைந்து போயுள்ள ஆவின் நிர்வாகத்தின் குளறுபடிகளையும், பால்வளத்துறை அமைச்சரான தனது கையறு நிலையையும் மறைக்க, தன்னைப் பற்றி ஊடகங்கள் பரபரப்பாக பேச வேண்டும், அது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சின்னவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது கவனத்திற்கு செல்ல வேண்டும் என்கிற அடிப்படையில் எதையாவது அறிவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பு தான் “24மணி நேரமும் ஆவின் பால், பால் பவுடர் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்ய அம்பத்தூர், மாதவரம், சோழிங்கநல்லூர் பால் பண்ணை வளாகத்திலும், அண்ணா நகர், அண்ணா நகர் கிழக்கு, விருகம்பாக்கம், மைலாப்பூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட இடங்களில் ஏற்பாடு” என்கிற செய்தியாகும்.

ஏனெனில் ஆண்டின் 365நாட்களும் குறிப்பாக மிக்ஜாம் புயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அத்தியாவசிய உணவுப் பொருளாக விளங்கும் பால் பாக்கெட்டுகள் தமிழகத்தின் மூளை முடுக்கில் இருக்கும் ஏழை, எளிய, நடுத்தர சாமானிய மக்களுக்கு மட்டுமின்றி மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் தங்கு தடையின்றி, தட்டுப்பாடின்றி தினசரி கிடைக்க வேண்டுமானால் உற்பத்தி தொடங்கி, விற்பனை வரையுள்ள விநியோக நடைமுறையில் இருக்கும் பால் முகவர்களுக்கான சப்ளை செயின் சரியாக செயல்படுவதை கண்காணித்து, அதனை முறையாக கையாள வேண்டுமே தவிர, அதை விடுத்து 24மணி நேரமும் இயங்கக் கூடிய வகையிலான ஆவின் பால் விற்பனை மையங்களை அங்கொன்றும், இங்கொன்றுமாக திறந்தால் பால் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கலாம் என எண்ணுவது நின்று கொண்டே பகல் கனவு காண்பதை போலாகும்.

குறிப்பாக பொதுமக்களுக்கு தினசரி பால் பாக்கெட்டுகள் தங்குதடையின்றி, தட்டுப்பாடின்றி கிடைத்திட வேண்டுமானால் முதலில் ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள பால் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளின் விநியோகமானது தினசரி நடைமுறையில் உள்ள குறித்த நேரத்தில் நடைபெற வேண்டும். அவ்வாறு குறித்த நேரத்தில் பால் முகவர்களுக்கான பால் விநியோகம் சரியாக நடைபெறவில்லை என்றால் அது எந்த அளவிற்கு பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, அரசுக்கு அவப்பெயரை உருவாக்கும் என்பதற்கு தற்போதைய இயற்கை பேரிடர் காலத்தில் ஆவின் நிர்வாகத்தின் செயலற்ற நிலையே சரியான சான்றாகும்.

எனவே ஆவின் பால் விநியோகத்தின் சப்ளை செயின் குறித்து அடிக்கடி ஊடகங்கள் முன் தம்பி.., தம்பி… என செய்தியாளர்களுக்கு அன்போடு பாடம் எடுக்கும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் பரபரப்பிற்காக இதுபோன்ற வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்திக் கொண்டு, தனியார் பால் நிறுவனங்களைப் போல ஆக்கபூர்வமான செயல்பாடுகளை முன்னெடுத்து, ஆவின் பால் விநியோகத்தில் உள்ள பால் முகவர்களுக்கான சப்ளை செயினை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய முயற்சி செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி ஊழல் பெருச்சாளிகளான ஆவின் அதிகாரிகளோடு கூட்டணி அமைத்துக் கொண்டு ஆவினை சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் மொத்த விநியோகஸ்தர்கள் (WSD) எனும் இடைத்தரகர்கள் முறையை முற்றிலுமாக ரத்து செய்து விட்டு மற்ற மாவட்டங்களில் இருப்பதைப் போல பால் முகவர்களுக்கு ஆவினோடு நேரடி வர்த்தக தொடர்புகளை கொடுக்க முன்வர வேண்டும்.

இல்லையெனில் இது போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஆவினுக்கும், அதனால் தமிழக அரசுக்கும் ஏற்படும் அவப்பெயரையும், களங்கத்தையும் போக்குவது என்பது இயலாத காரியமாகும்.

மேலும் ஆவினில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, ஆவினில் உள்ள நிர்வாக சீர்கேடுகளை களைந்து சீர்செய்து, ஆவினை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தால் அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு,

தவறுகளையும், ஊழல், முறைகேடுகளையும் சுட்டிக் காட்டுவோரை தனியார் பால் நிறுவனங்களின், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி என்று விமர்சனம் செய்யும் பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் அவர்கள், தற்போதைய இந்த இயற்கை பேரிடர் காலத்தில் ஆவின் பால் பாக்கெட்டுகளை அதிகளவில் பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்கவும், கள்ளச்சந்தையில் ஆவின் பால் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு,

கடந்த ஒரு வார காலத்தில் தனியார் நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அதிகளவில் விற்பனை நடைபெற மறைமுகமாக உதவியிருப்பதன் மூலம் தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்களின், கார்ப்பரேட்டுகளின் கைக்கூலி யார்..? என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

இவ்வாறு கூறியுள்ளார்.