பெங்களூரு: “அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும். ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற அமர்வின்  தீர்ப்பை அனைத்து தரப்பினரும் ஏற்குமாறு கர்நாக முதல்வர் பொம்மை வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் கர்நாடக கல்வி அமைச்சர், மத்திய அமைச்சர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

சிக்மகளூரில் உள்ள I.D.S.G அரசு கல்லூரிக்கு வெளியே, ஆன்லைன் வகுப்புகள் அல்லது ஆஃப்லைன் வகுப்புகளில் ஹிஜாப் அணிய அனுமதி கோரி பர்தா மற்றும் ஹிஜாப் அணிந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இது சர்ச்சையானது, இதைத்தொடர்ந்து, ஹிஜாப் அணிய அனுமதி கோரி மாணவிகள் மற்றும் பலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை 3நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி, ஹிஜாப் தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டது. மேலும், பள்ளி கல்லூரிகளில், மத அடையாளங்களை தவிர்க்க சீருடை அவசியம் என்றும் தெரிவித்துள்ளது. கர்நாக உயர்நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்புக்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது.

இதையடுத்து, கர்நாடக முதல்வர் பொம்மை, நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும்,  மாநிலத்தில் அமைதியும் நல்லிணக்கமும் பேணப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதுடன்,  ஹிஜாப் தொடர்பான உயர்நீதிமன்ற அமர்வின்  தீர்ப்பை அனைவரும் ஏற்குமாறும், எங்கள் குழந்தைகளின் எதிர்காலம், கல்வியை விட முக்கியமானது எதுவுமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பு குறித்து கூறியுள்ள கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர், பி.சி.நாகேஷ், “அனைத்து மாணவர்களும் சமமாக இருப்பதை உறுதி செய்வதற்காகத்தான் சீருடை உள்ளது, எனவே நாட்டின் இளம் மனதில் எந்த தாழ்வு மனப்பான்மையும் எழாது” என்று தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ள பாஜக செய்தித்தொடர்பாளர் மாளவிகா அவினாஷ், மாணவர்கள் தயவு செய்து இப்போதே வகுப்புக்குத் திரும்புங்கள் என்று  கூறியுள்ளார்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.   உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று அனைவரும் அமைதி காக்க, மாநிலமும் நாடும் முன்னேற வேண்டும் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். மாணவர்களின் அடிப்படை வேலை படிப்பதுதான். எனவே இதையெல்லாம் விட்டுவிட்டு அவர்கள் படித்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

தீர்ப்பையொட்டி, பெங்களூருவில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தியின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணியக்கூடாது! கர்நாடக உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு….