சக்திவேல் இயக்கத்தில் விதார்த், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘பயணிகள் கவனிக்கவும்’. மலையாளத்தில் ‘விக்ருதி’ என்ற பெயரில் வெளியாகி வெற்றியடைந்த படத்தின் ரீமேக்.

சமூக வலைத்தளங்களில் வெற்று லைக், கமெண்ட்டுக்காக, அடுத்தவரின் உணர்வுகளை அறிந்து கொள்ளாமல் செயல்படும் நெட்டிசன்களுக்கான பாடம் தான் படம்.

பள்ளி நூலகத்தில் புத்தகக் காப்பாளராக பணிபுரிகிறார் விதார்த். செவித்திறன் , பேசும் திறன் இல்லாதவர். அவருடைய மனைவி லஷ்மி ப்ரியா. அவரும் கணவரைப் போல் மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். வசதி வாய்ப்பு குறைவுதான் என்றாலும் மகிழ்ச்சிக்கு குறைவில்லாத குடும்பம்.

ஒரு முறை, மாநகர தொடர்வண்டியில் பயணம் செய்யும் விதார்த், அசதி காரணமாக அசந்து தூங்குகிறார்.

அதே ரயிலில் பயணிக்கும் கருணாகரன், இதைப் பார்க்கிறார்.

அதன் பிறகு விதார்த் எங்கும் தலைகாட்ட முடியவில்லை. கருணாகரனுக்கோ எப்போது காவல்துறையில் சிக்குவோம் என்கிற பயம்.

இது ஏன்.. முடிவு என்ன என்பதுதான் கதை.

விதார்த் எப்போதும்போல தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வாய் பேச முடியாத இவரது நடிப்பை, உலகமே பேசப்போகிறது.

தவறே செய்யாத தன்னை ஊரே கேலியாக பார்ப்பதை அறிந்து அவர் படும் பாடு.. மகனின் அறியா கோபத்தை சமாளிக்க முடியாமல் படும் வேதனை! சிறப்பான நடிப்பு. குறிப்பாக இறுதிக் காட்சியில் கண்கலங்க வைக்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகன் மற்றும் வில்லன் கருணாகரன். அதாவது இரண்டுக்கும் நடுவிலான கதாபாத்திரம். அதை உணர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

சிக்கலில் இருந்து மீள்வோமா என அவர் தவிக்கும் தவிப்பு, மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் சொல்லவும் முடியாமல் உழல்வது.. அபாரம்.

சில காட்சிகளே வந்தாலும் காவல் அதிகாரி பாத்திரத்தில் முத்திரை பதித்திருக்கிறார் பிரேம்,

லட்சுமி ப்ரியா, மாசூம் சங்கர், மூணார் ரமேஷ், ராமச்சந்திரன் அனைவரும் இயல்பான நடிப்பை அளித்திருக்கிறார்கள்.

பாண்டி குமார் ஒளிப்பதிவும் ஷாம்நாத் நாக்கின் இசையும் படத்துக்கு பலம்.

விஞ்ஞான வளர்ச்சி எவ்வளவு வந்தாலும் மனிதரின் அஞ்ஞானம் அகலவில்லை என்றால் பிரச்சினைதான் என்பதை, யதார்த்தமாக சுவையாக சொல்லி இருக்கிறார் இயக்குநர்.

இந்தப் படம் ‘ஆஹா’ ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது. அனைவரும் பார்க்க வேண்டிய படம்.