சான்ஃப்ரான்சிஸ்கோ

மைக் டைசனுடன் விமானத்தில் பயணம் செய்யும் போது குத்து வாங்கிய நபர் ரூ.3 கோடி இழப்பீடு கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட ஜெட்புளூ விமானத்தில் மைக் டைசனுக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்த மெல்வின் டவுன்சென்ட் என்ற பயணி, மைக் டைசனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தார். இவர் டைசனின் காதுக்கு அருகே சென்று பேசி நச்சரித்துக் கொண்டே இருந்தார்.

பொறுமை இழந்த மைக் டைசன், அந்த நபரை பயங்கரமாக தாக்கினார்.  டைசன் மாறி மாறி குத்துவிட்டதில் அந்த நபருக்கு காயம் ஏற்பட்டது.  சமூக வலைத்த்லங்களில் இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் மைக் டைசன் ஒழுக்கமற்ற செயலில் ஈடுபட்டதாக விமர்சித்தனர்.

அந்த பயணி மைக் டைசனின் கோபத்தை தூண்டும் வகையில் பேசியதாக டைசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  சம்பவம் நடந்து ஒரு வருடத்தை தாண்டிய நிலையில், டைசனிடம் குத்து வாங்கிய மெல்வின் டவுன்சென்ட், நஷ்ட ஈடு கேட்டுள்ளார். ,மைக் டைசன் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களுக்கு அதிக மருத்துவச் செலவுகளை செய்ததாக கூறி, 3.50 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 கோடி) இழப்பீடாக வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

பயணி டவுன்சென்டின் வழக்கறிஞர்கள் டைசனின் வழக்கறிஞர்களுக்கு கடிதம் எழுதி உள்ளனர். கடிதத்தில், நஷ்ட ஈடு தொடர்பான உடன்பாடு எட்டப்படாவிட்டால் வழக்கு தொடரப் போவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இந்த செட்டில்மென்ட் ஒப்பந்தம் தொடர்பான அழைப்பை டைசனின் வழக்கறிஞர் நிராகரித்து பணம் எதுவும் கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறி உள்ளார்.

இந்த தாக்குதல் தொடர்பாக டைசன் மீது எந்த குற்ற வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் டவுன்சென்டின் தூண்டுதல் காரணமாக இந்த சம்பவம் நடந்ததால் டைசனுக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்றும் சான் மேடியோ கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஸ்டீவ் வாக்ஸ்டாபி தெரிவித்துள்ளார்.