ராச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் 24 மணி நேரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் இந்தியாவில் நடந்து முடிந்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.  50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து 8வது முறையாகத் தோல்வியை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாகத் தோற்றது.

இது குறித்துக் கட்டும் விமர்சனங்கள் எழுந்ததால் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று பாபர் அசாம் தம்முடைய கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே வஹாப் ரியாஸ் பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வு குழு தலைவராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு உறுதுணையாக கம்ரான் அக்மல், ராவ் இப்திகார் மற்றும் சல்மான் பட் ஆகியோர் தேர்வுக் குழுவின் ஆலோசகர்களாக செயல்படுவார் என்று பாகிஸ்தான் வாரியம் அறிவித்தது. இவர்களில் சல்மான் பட் ஆலோசகராக நியமிக்கப்பட்டது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 2010 ஆம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முகமது அமீர் மற்றும் முகமது ஆசிப் ஆகியோருடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சல்மான் பட் ஆதாரத்துடன் பிடிபட்டதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தடை பெற்றார்.

அவரை தேர்வு குழுவின் ஆலோசகராக நியமிப்பது பாகிஸ்தான் அணியை எவ்வாறு முன்னோக்கி எடுத்துச் செல்லும்? என்று பல தரப்பினர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினார்கள். சூதாட்டம் செய்து நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியவரை தேர்வுக் குழுவில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா கடுமையாக விமர்சித்தார்.

தற்போது பாகிஸ்தான் தேர்வுக் குழு ஆலோசகராக நியமிக்கப்பட்ட சல்மான் பட் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக அந்நாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவர் மீது வெளியிலிருந்து வந்த விமர்சனங்களை தாண்டி பாகிஸ்தான் வாரியத்திற்குள்ளேயே அவருக்கு சில எதிர்ப்புகள் உருவானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தேர்வுக் குழு தலைவர் வஹாப் ரியாஸ் தெரிவித்துள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு முன்னாள் வீரர் குழுவின் ஆலோசகராக நியமிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் வஹாப் ரியாஸ் கூறியுள்ளார்.