சென்னை

தொடர்ந்து 24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனத் தொண்டர்களை திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.  அதையொட்டி தமிழகம் முழுவதும் நேற்று அனைத்து தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடந்தது.  இந்த வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவுகள் சீல் வைக்கப்பட்டுப் பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று பதிவான வாக்குகள் வரும் மே மாதம் 2 ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் வெளியாக உள்ளன.  தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெறுவதால் அனைத்து மாநிலங்களுக்கான அனைத்துக் கட்ட தேர்தல் வாக்கெடுப்புக்களும் முடிவடைந்த பிறகே வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தொண்டர்கள் தேர்தல் வேலை முடிந்து விட்டது என்று நினைக்காமல் இனிதான் கவனமாக இருக்க வேண்டும்.  தொண்டர்கள் அனைவரும் 24 மணிநேரமும் உறங்காமல் இரவு பகல் பாராமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாகப் பாதுகாப்பது  கடமை ஆகும்.  காவல்துறை வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பாதுகாக்கும் என நினைத்து கவனக்குறைவாக இருந்து விடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.