சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து, தேர்தல் பிரசாரத்தின்போது,  சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, திமுக இளைஞரணி  செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது கொடுக்கப்பட்டுள்ள புகாரின்பேரில், அவர் 7ந்தேதி மாலைக்குள் (இன்று) விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் வெற்றிகரமாக நேற்று (ஏப்ரல் 6ந்தேதி) முடிவடைந்துள்ளது. முன்னதாக   தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க. இளைஞரணித் தலைவரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடும்  தாராபுரத்தில், கடந்த மார்ச் 31 ஆம் தேதி தேர்தல் பரப்புரை செய்தபோது, “பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தம் காரணமாக மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் மரணமடைந்தனர்” என  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதற்கு, சுஷ்மா சுவராஜின் மகள்  டிவிட்டர் மூலம் மறுப்பு தெரிவித்து, உதயநிதிக்கு கண்டம் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் (Election Commission) நடவடிக்கை எடுக்க வேண்டும் பா.ஜ.க. (BJP) சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. அவர்களது மனுவில்வ,  தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனுவை தகுதி நீக்கம் செய்யக் கோரியதோடு, அவரை திமுக நட்சத்திர பேச்சாளர் (DMK Star Campaigners List) பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த மனுமீது ஆய்வு நடத்திய தேர்தல் ஆணையம்,  விளக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.