கமலாக மாறிய பார்த்தசாரதி!
பாரம்பரிய குடும்பத்தில் பிறந்து பெற்றோர் சொற்படி 2 சகோதரரர்கள் வழக்கறிஞராக ஆனார்கள் என்றால், கமல் சென்ற பாதையோ நடனம், நடிப்பு கதை என முற்றிலும் நேர்மாறானது. பள்ளிப்படிப்பைகூட முழுதாக முடிக்கமுடியாத அந்த கமல்தான், அண்மையில் சென்னை அமெரிக்க துணை தூதரகத்திற்கு பேட்டி அளித்தபோது வித்தியாசமான பரிணாமத்தை காட்டினார்.
பேட்டி எடுத்தவர், அந்தக்காலத்து ஹாலிவுட் ஜாம்பவான்களான மார்லன் பிராண்டோ மற்றும் ஜான் வெயின் ஆகியோரின் புகழ்பெற்ற வசனங்களை பேசச்சொன்னபோது, அதே மாடூலேஷனில் அப்படியே பேசிக்காட்டி அசத்தினார். அந்த அளவிற்கு அவருக்குள் திரை ஆர்வம் ரத்தத்தோடு ஊறிவிட்டிருந்தை பார்க்கமுடிந்தது. இவ்வளவிற்கும் காரணம், கமல் பயிற்சி எடுத்துக்கொண்ட பட்டறைகள் அப்படி.
5 வயதில் நடிக்க ஆரம்பித்து 1960ல் கமலின் முதல்படம் களத்தூர் கண்ணம்மா வெளியானது. காலத்தால் அழிக்கமுடியாத காவியங்களை சிவாஜிக்காக இயக்கிய ஏ.பீம்சிங்தான் கமலை முதலை இயக்கியவர். உதவி இயக்குநராக இருந்த எஸ்பி முத்துராமன்தான் பின்னாளில் சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி என கமலின் வசூல் மழை படங்களை இயக்கி ரஜினிக்கு பாக்ஸ் ஆபிஸ் போட்டியாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.
ஜெமினி, சிவாஜி, எம்ஜிஆர் என அவரின் குழந்தை நட்சத்திர படப்பட்டியல் டாப் ஸ்டார்களுடன் ஏறுமுகமாவே அமைந்தது ஒரு மாஜிக் என்றே சொல்லலாம். பார்த்தால் பசி தீரும் படத்தில் இரட்டை வேடத்தில் சிறுவனாக அசத்திய கமலை, அப்போதே மலையாளம் அள்ளிக்கொள்ள தவறவில்லை.
1962ல் கண்ணும் கரளும் படத்தில் கமலை இயக்கும்போதே கே.எஸ்.சேதுமாதவனுக்கு சிறுவனின் திறமை தெரிந்திருக்கும்போல.. அதனால்தான் பின்னாளில் தமிழில்வெற்றிகரமான கதாநாயகன் சீட் கிடைக்காமல் தத்தளித்துக்கொண்டிருந்த கமலை 1974ல் கன்யாகுமாரி படத்தின் கதாநாயகனாக்கி மலையாள படவுலகில் நடிப்பின் பரிமாணங்களை அடுத்தடுத்து பெற்றுக்கொள்ள வழிவகுத்துத்தந்தார்.
சிறுவயதில் நட்சத்திரங்களாய் மின்னுபவர்கள் வயது ஏறஏற ரெண்டுங்கெட்டான் நிலையை சந்தித்து தடைபடுவார்கள். 9 வயது கமலுக்கும் அப்படியொரு கட்டம் வந்தது. இளைஞனான பிறகே ஒப்பனிங்கே கிடைக்காமல் அல்லாடிய கமலுக்கு, முதன் முதலில் தலைகாட்ட உதவியது தேவரின் மாணவன்(1970) படம். விசிலடிச்சான் குஞ்சிகளா என குட்டி பத்மினியுடன் பாடலுக்கு ஆடினார்.
எம்ஜிஆர்- சிவாஜி சகாப்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிய வேளையில் பாலச்சந்தர் தந்த அருமையான வாய்ப்புகளை உள்வாங்கிகொண்ட கமலால், பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தில் சப்பாணியாக வெறும் கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டுவந்து ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யத்தோடு பார்க்கவைக்கமுடிந்தது.
kamal
ஆர்.சி. சக்தியும், அனந்துவும் திரைக்கதை அமைப்பதில் சொல்லிக்கொடுத்த பாடங்களை கமல் அலட்சியப்படுத்தாமல் கற்றுக்கொண்டார். குரு (1980) படத்தில் திரைக்கதை வசன வித்தையை தனது 100 வது படத்தை சொந்தமாய் எடுத்த ராஜபார்வையில் காட்டினார். 1981ல் அந்தப் படம் தோல்வி என்பதால் அந்த பரீட்சை அப்போதைக்கு தற்காலிக தடைவாங்கிக்கொண்டது.
ஆனால், அடுத்த ஆண்டே,எதைப்பற்றியுமே கவலைப்படாமல் நடித்த பக்கா மசாலாவான சகலகலா வல்லவன், சென்னையில் திரையிட்ட நான்கு பெரிய தியேட்டர்களிலும் 175 நாட்கள் ஒடி வெள்ளிவிழா கொண்டாடியபோது கமலஹாசனுக்கு ரசிகர்களின் போக்கே புரியாமல் மிஞ்சியது குழப்பம்தான்.
இருந்தபோதிலும் வசூலுக்காக ரஜினிக்கு ஈடுகொடுக்க தொடர்ந்து கமர்சியல் மசாலா நாயகனாக ஆடிக்கொண்டிருந்த கமலுக்கு முக்கிய பிரேக் இன்னொரு சொந்தப்படமான விக்ரம் என்று சொல்லலாம். எழுத்தாளர் சுஜாதாவுடன் அவர் திரைக்கதை அமைக்க கற்றுக்கொண்ட விதம் பழைய குருமார்களின் பங்களிப்போடு கலந்து புதிய ரூட்டில் உருவானது.
1987ல் நாயகன் படம் இந்திய அளவில் பேசப்பட்டபிறகு, ஒவ்வொரு திரையுலக அடியை பார்த்துப்பார்த்தே வைத்தார் கமல். அதனால்தான் அபூர்வ சகோதரர்கள், தேவர்மகன், மகாநதி, குருதிப்புனல், ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம் என திரைக்கதை உட்பட பல அம்சங்களுக்காக பேசப்படும் படங்கள் பட்டியல் அடுத்தடுத்து மைல்கற்களை ஏற்படுத்திக்கொண்டேபோகின்றன.
இன்னொருபுறம், இந்தியாவில் இருந்து ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்த படங்களில் கமல் படம்தான் அதிகமுறை என்கிற சாதனையும் உண்டு.  இந்தியில் சாகர்(1985) தெலுங்கில் சுவாதி முத்யம் (1986) நாயகன் (1987) தேவர்மகன் (1992) குருதிப்புனல்(1995) இந்தியன்(1996) ஹேராம் (2000) என ஏழு முறை அவரின் படங்கள் ஆஸ்கரின் கதவுகளை தட்டியிருக்கின்றன.
கமலின் பயணத்தை சற்றே பின்னோக்கி பார்த்தால் கொஞ்சம் மிரட்சியாகவே இருக்கும்.. 1973 ஆம் ஆண்டு அரங்கேற்றம் படத்தில் கமல் கதாநாயகன் அந்தஸ்ந்தில் உதயமானபோது, ஜெயலலிதா, வாணிஸ்ரீ, மஞ்சுளா, லதா, போன்றோர் கொடிகட்டிப்பறந்தனர். அதற்கப்புறம், சுஜாதா, ஸ்ரீபிரியா, ஸ்ரீதேவி என ஒரு தலைமுறை கடந்து, ராதா, அம்பிகா, ரேவதி தலைமுறை. பின்னர் குஷ்பு,கௌதமி,மீனா, ரம்பா, சிம்ரன், போன்றவர்களின் காலகட்டங்களிலும் கமல் முன்னணி நாயகன். இந்த நடிகைகள் நிலை இன்றைக்கு எப்படி என்று நினைக்கும்போது, நேற்றுவந்த பூஜாகுமாருடன் கமல் ஜோடிபோட்டு அசத்திக்கொண்டிருக்கிறார்.
kamal-hasan
சுதாகர், பாக்யராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்தர், மோகன், பிரபு, சத்ய ராஜ், கார்த்திக், ராமராஜன், என அவ்வப்போது பிளாக் பஸ்டர்களை கொடுத்து ரசிகர்களை ஆட்டிப்படைத்துவந்த திடீர் சூப்பர் பவர் ஹீரோக்களையும் கமலின் திரைப்பயணம் அட்டகாசமாகவே கடந்தது. விஜய், அஜித், தனுஷ், சிம்பு போன்றோடனும் பயணிக்கிறது.. ஒரு புள்ளிவிவரத்திற்கு எடுத்துக்கொண்டால்கூட 1959ல் கமல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்தபோது தமிழின் முதல் சூப்பஸ்டாரான எம்கே தியாகராஜபாகவதரும் சினிமா களத்தில் இருந்தார் என சொல்லலாம்.. அதே கமல்தான் இப்போது சிவகார்த்திகேயனோடு விஜய்சேதுபதி முட்டிக்கொண்டிருக்கும்  வேளையிலும் சபாஷ் நாயுடு எப்படி இருக்கும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அவரின் திரைப்பட வீச்சு எவ்வளவு வீரியமானது!
இந்திய அளவில் இன்றைக்கும் நடித்துக்கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் 57 ஆண்டுகால திரைப்பட வரலாறு கொண்ட ஒரே நபர். உலக நாயகன் கமல் மட்டுமே.
திரையுலகில் புதுப்புது உத்திகளையும் நவீன தொழில் நுட்பங்களையும் கமல் அறிமுகப்படுத்தும்போதெல்லாம் அவர் 20 வருடங்கள் அட்வான்ஸாக இருக்கிறார் என்று பலர் சொலவார்கள். ஆனால் கமலோ, எப்போதுமே ‘நான் 20 பின்தங்கியவனாகவே உணருகிறேன்’ என்று சொல்வார், கமல் என்கிற பார்த்தாசாரதி. ஆம். கமலின் தாயார் ராஜலட்சமி மறைகிறவரை அவர் வைத்த ஒரிஜினல் பெயரான பார்த்தசாரதி என்றுதான் கூப்பிடுவார்.
கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்