காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் தந்த அழுத்தம் காரணமாகவே பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியைத் தாம் துறக்க நேரிட்டதாக கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் சொன்னதாக வெளியான கருத்தை பாஜக மறுத்துள்ளது.
அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று உரையாற்றிய பாரிக்கர், காஷ்மீர் விவகாரத்தில் பேச்சு வார்த்தையை விட, உறுதியான நடவடிக்கைகள் மூலமாக மட்டுமே தீர்வு காணமுடியும் எனக் கூறியதாக தகவல்கள் வெளியாகின. பேச்சுவார்த்தைக்கு அமரும் போது, இருதரப்பிலும் சிக்கல்கள் அதிகரித்து விடுவதால், தீர்வு என்பது சாத்தியமில்லாததாக போய்விடுவதாக பாரிக்கர் தெரிவித்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகின. இதுபோன்ற விவகாரங்கள் தந்த மன அழுத்தம் காரணமாகவே, மத்திய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு தாம் மீண்டும் வர நேரிட்டதாக பாரிக்கர் தமது பேச்சில் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.
பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்தத் தகவலை இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாளேடுகளும் செய்தியாக வெளியிட்டிருந்தன. ஆனால், தற்போது, கோவா முதலமைச்சர் பாரிக்கர் அதுபோன்ற கருத்தைத் தெரிவிக்கவில்லை என பாரதிய ஜனதா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மறுக்கப்பட்டுள்ளது. மேலும், மனோகர் பாரிக்கர் கலந்து கொண்ட விழாவில் பிடிஐ செய்தியாளர் யாரும் செய்தி சேகரிக்க வரவில்லை என்றும் பாஜகவின் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோகர் பாரிக்கர் இதுபோன்ற கருத்தைச் சொன்னாரா, இல்லையா என்பதற்கான பதில் தெரியவில்லை.
ஆனால், காஷ்மீரில் வன்முறை அதிகரித்து வருவது, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்திருப்பது போன்ற நிகழ்வுகள் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், பாரிக்கர் கூறியதாக வெளியான கருத்துகள், பாரதிய ஜனதாவுக்கு தலைவலியாக மாறியிருப்பது மட்டும் தெரிகிறது.