சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைமையிலான  கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை  50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் – சங்கங்கள் சந்தித்த நிலையில், அவர்கள்  இந்தியா கூட்டணி வெற்றி பெறப் பாடுபடுவோம் எனவும் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முதற்கட்டவேட்புமனுத்தாக்கலும் நிறைவடைந்துள்ளது. 2வது கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக தலைமையிலான இண்டி கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின்  மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், திமுக கூட்டணிக்கு 50க்கும் மேற்பட்ட அமைப்புகள், சமூதாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

அதன்படி, திக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகியோர் தம்முடைய கட்சிகள் சார்பில் ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.  இராம.வீரப்பன் தலைமையிலான எம்.ஜி.ஆர்.கழகம், புதிய திராவிடர் கழகம் சார்பில் அதன் நிறுவனத் தலைவரும், தமிழ் நாடு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினருமான ராஜ் கவுண்டர் மற்றும் நிர்வாகிகள்; ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் சமூக நீதி மக்கள் கட்சி மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவர் வடிவேல் ராமன் மற்றும் நிர்வாகிகள், தென்னக அருந்ததியர் மக்கள் முன்னேற்றக் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் செங்குட்டுவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் பூசாரி நல சங்கத் தலைவர் வாசு மற்றும் மாநில நிர்வாகிகள்,

தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கத் தலைவர் பரிமளம் மற்றும் நிர்வாகிகள், தென்னிந்திய விஸ்வ-கர்மா முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் சரவணன்; தமிழக வீரசேவை முன்னேற்ற பேரவை, தலைவர் தங்க தமிழ் செல்வன்; தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் எம்கேடி பேரவை மாநிலத் தலைவர் கவிஞர் ரவி பாரதி, எஸ்.ஆர்.எம். மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன்

சமூக நீதிக் கட்சி சார்பில், மாநில பொதுச்செயலாளர் வெள்ளமடை நாகராசன் ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா கூட்டணிக்கு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாகவும், இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிப்பதோடு, திமுக கூட்டணி வெற்றிபெற தங்கள் கட்சி நிர்வாகிகள் பாடுபடுவார்கள் எனவும் உறுதி அளித்தனர்.

மேலும், பூலித்தேவன் மக்கள் கழகத்தின் தலைவர் எஸ்.பெருமாள்சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். புதிதாக 16 விவசாய சங்கங்கள் ஆதரவு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கே.வீ.இளங்கீரன் தலைமையில் இந்திய விவசாயிகள் சங்கம் தனபதி, ஐக்கிய விவசாயிகள் சங்கம் சங்கரய்யா, சிபா கரும்பு விவசாயிகள் சங்கம் வாரணாசி ராஜேந்திரன், தற்சார்பு விவசாயிகள் சங்கம் பொன்னையா, உழவர் மன்ற கூட்டமைப்பு ஜீவகுமார், மதுரை மாவட்ட நஞ்சை புஞ்சை விவசாயிகள் சங்கம் மணிகண்டன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் சுப்பிரமணியம் உட்பட மொத்தம் 16 அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை வியாழக்கிழமை நேரில் சந்தித்து திமுக கூட்டணிக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளன.