டெல்லி: தோ்தல் ஆணையா்கள் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதுபோல, புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீரிலும் 33% மகளிா் இடஒதுக் கீடுக்கு வழி வகுக்கும் இரு  மசோதாக்கள் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது.

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பல மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கிடைல் கடந்த கூட்டத் தொடரின்போது,  இந்திய தலைமைத் தோ்தல் ஆணையா், பிற தோ்தல் ஆணையா்கள் (நியமனம், பணி நிபந்தனைகள், பதவிக் காலம்) மசோதா-2023, கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1991-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனம் குறித்து இடம்பெறாத நிலையில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டது.

மசோதா குறித்த விவாதத்தின்போது பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘முந்தைய சட்டத்தில் சில குறைபாடுகள் இருந்ததால், புதிய சட்டத்துக்கான தேவை எழுந்தது. உச்சநீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் நியமனங்களைப் பொருத்தவரையில், தற்போது மத்தியஅரசு முடிவெடுத்து வருகிறது. இந்த மசோதாவின்படி, தேடுதல் மற்றும் தோ்வுக் குழு இது குறித்து முடிவெடுக்கும். மசோதாவில் சட்டத் திருத்தம் மூலம் ஊதியம் தொடா்பாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தலைமைத் தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் பதவிக் காலத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இந்த மசோதா தோ்தல் ஆணையத்தை நிா்வாகத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாகவும், உச்சநீதிமன்றத் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்வதாகவும் உள்ளது என காங்கிரஸ் எம்.பி. ரண்தீப் சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா். ஆளுங்கட்சி தனக்குச் சாதகமானவா்களைத் தோ்தல் ஆணையா்களாக நியமித்து, தோ்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இது ஜனநாயகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என பிற எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன.

ஆனால்,  இந்த மசோதாக்கள் ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில்,  மாநிலங்களவையில் விவாரதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சிகள் மோடி அரசுக்கு எதிராகல் குரல் எழுப்பியதுடன், இந்த மசோதாவை எதிர்த்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஆனால், பாஜக பெரும்பான்மை இருப்பதால்,. குரல் வாக்கெடுப்பின் மூலம்  இந்த மசோதா நேற்று  நிறைவேற்றப்பட்டது.

அதுபோல, கடந்த செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளித்தார். அதை தொடா்ந்து, இந்த மசோதா சட்டமானது.

இதன் அடுத்தக்கட்டமாக யூனியன் பிரதேசங்களான,  புதுச்சேரி மற்றும் ஜம்மு-காஷ்மீா்  மாநிலங்களிலும்  மகளிா் இடஒதுக்கீடு சட்டத்தை நீட்டிக்கும் மசோதாக்கள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் 106-ஆவது திருத்தத்தின்படி, நாட்டில் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடைபெறும் மக்களவை மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைக்குப் பிறகே மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மகளிா் இடஒதுக்கீடு அமலாக சற்று காலமெடுக்கும் என்று தெரிகிறது.

இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு 15 ஆண்டுகளுக்கு நீடிக்கும். அதன்பின்னா், நாடாளுமன்ற முடிவுக்கேற்ப அது நீட்டிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.