டெல்லி: மத்தியில் ஆட்சி செய்து வரும் மக்கள் விரோத மோடி தலைமையிலான பாஜக அரசு மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.  காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார். அதுபோல தெலுங்கான முதல்வர் கேசிஆர் கட்சியான, பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இதுவரை ஒருநாள்கூட  முழுமையாக நடைபெறாத நிலையில் உள்ளது எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி அவைகளை முடக்கி வருகின்றனர். மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருவதால்,  இரு அவைகளும் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மோடி தலைமையிலான பாஜக அரசின் மீது மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் கவுரவ் கோகோய் தீர்மானத்தை இன்று (ஜூலை 26) காலை 9.20 மணியளவில் தாக்கல் செய்தார்.

அதே போல தெலுங்கானா  முதல்வர் கே சந்திரசேகரராவ் கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நமா நாகேஸ்வர ராவும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானம் குறித்து அவைத்தலைவர் (சபாநாயகர்) ஆய்வு செய்ய குறைந்தபட்சம் 10 நாட்கள் அவகாசம் எடுக்க முடியும். ஆனால், அவை இன்னும் 13 நாட்கள் மட்டுமே நடைபெற இருப்பதால், இந்த கூட்டத்தொடரில், நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுகுறித்து கூறிய எதிர்க்கட்சியினர், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் என்ன என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும், மணிப்பூர் விவகாரம் உள்பட எங்களது பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் பதில் கூற, நம்பிக்கையில்லா தீர்மானம் நல்ல வாய்ப்பாக இருக்கும்.  பிரதமரை பேசவைக்க வேறு வழி இல்லை’’ என்று தெரிவித்துள்ளனர்.