பாராளுமன்றம்: 4வது நாளாக மீண்டும் முடக்கம்…!

Must read

டில்லி:
ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரத்தால் பாராளுமன்றம் தொடர்ந்து 4வது நாளாக முடங்கி போய் உள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 4வது நாளாக இன்றும் பாராளுமன்றம் எதிர்க்கட்சியினரால் முடக்கப்பட்டு உள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு குறித்தும், இதன் காரணமாக மக்கள் படும் அவஸ்தைகள் பற்றியும் பேச வேண்டும் என்று, பெரும்பாலான  எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவை களிலும் பிரச்சினையை எழுப்பி வருகின்றன.
இதன்காரணமாக கடந்த 16, 17, 18-ந்தேதிகளில் பாராளுமன்றம் முடங்கியது. இன்று மீண்டும் கூடியதும், எதிர்க்கட்சிகள் இதே கோரிக்கையை முன்னிறுத்தி பாராளுமன்றத்தை முடக்கி உள்ளனர்.
parliment-mudamkam
மக்களவை முடக்கம்
இன்று காலை  பாராளுமன்றம் கூடியதும் காங்கிரசார் எழுந்து, ரூபாய் நோட்டுகள் விவகாரம் குறித்து பிரதமர் மோடி சபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று கூச்சலிட்டனர். மக்களவையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எழுந்து இதுகுறித்து ஆவேசமாக பேசினார்.
அப்போது,  ரூபாய் நோட்டுகள் விவகாரம் பற்றி சட்ட விதி 56-ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார். மேலும்,  இதுபற்றி விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால், கார்கேவின் கோரிக்கையை  சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்க வில்லை.
இதையடுத்து காங்கிரசார் எழுந்து மத்திய அரசை எதிர்த்து கோ‌ஷமிட்டனர். இதனால் கடும் அமளி நிலவியது. எனவே சபையை மதியம் 12 மணி வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியபோது காங்கிரஸ் உள்பட எதிர்க் கட்சி எம்.பி.க்கள் ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை எழுப்பி கோ‌ஷமிட்டனர். சபையை சுமூகமாக நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பிற்பகல் 2 மணி வரை சபையை ஒத்திவைப்பதாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். அதன்பிறகும் அமளி தொடர்ந்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை முடக்கம்
மாநிலங்களவையிலும் இன்று ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அப்போது சபையில் இருந்த மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி எழுந்து பேசினார்.
அவர் கூறியதாவது:-
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகள் முறையாக விவாதம் நடத்த முன்வர வேண்டும் என்றார். மேலும், விவாதத்துக்கு  நாங்கள் தயாராக இருக்கும் போது, நீங்கள் (எதிர்க்கட்சிகள்) தேவை இல்லாமல் கூச்சலிட்டு விட்டு சென்று விடுவது ஏன்?
உண்மையில் இந்த வி‌ஷயத்தில் எதிர்க்கட்சிகள் விவாதத்தை விரும்ப வில்லை. பாராளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த விடக்கூடாது என்பதே எதிர்க்கட்சிகளின் நோக்கமாக உள்ளது என்றார். நோட்டுகள் செல்லாது குறித்த விவாதத்துக்கு நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம்.
இவ்வாறு அருண்ஜெட்லி கூறினார்.
ஆனால், நிதி அமைச்சர்
அருண்ஜெட்லியின் இந்த கோரிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டு கொள்ளவில்லை. சபையின் மையப் பகுதிக்கு சென்று கோ‌ஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.
கோஷமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்களை உரிய இடத்தில் அமருமாறும், சமரசம் செய்தும், கண்டித்தும் சபாநாயகர் குரியன் பேசினார். ஆனால்,  எம்.பி.க்கள் அமைதியாகாமல் கோஷமிட்டவாறே இருந்தனர்.
இதையடுத்து அவர் சபையை 11.30 மணி வரை ஒத்திவைத்தார். மீண்டும் சபை கூடியதும் அதே பிரச்சினை எழுந்தது. இதனால் மதியம் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
பகல் 12 மணிக்கு அவைத்தலைவர் ஹமீத்அன்சாரி வந்து சபையை நடத்த முயன்றார். அவர் எம்.பி.க்களைப் பார்த்து, “தயவு செய்து கேள்வி நேரத்தை நடத்த ஒத்துழைப்புத் தாருங்கள்” என்றார்.
ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சபையின் நடுப்பகுதிக்கு வந்து தொடர்ந்து கோ‌ஷமிட்டபடி இருந்தனர். இந்த அமளியால் சபையை ஹமீத் அன்சாரியால் நடத்த இயலவில்லை. எனவே அவர் அவை மூன்றாவது முறையாக மதியம் 12.30 மணி வரை ஒத்திவைத்தார்.
மீண்டும் சபை கூடிய போது “ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். விதி 56-ன் கீழ் அனைத்து அலுவல்களையும் ஒத்தி வைத்து விட்டு, ஒத்திவைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் விவாதம் நடத்தி ஓட்டெடுப்புக்கு முன் வர வேண்டும்” என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதை ஏற்காத மத்திய அரசு “முதலில் ரூபாய் நோட்டுகள் பிரச்சினை பற்றி விவாதம் நடத்த வாருங்கள்” என்று கூறி வருகிறது.
இதை எதிர்க்கட்சிகள் ஏற்காமல் அமளியில் ஈடுபட்டதால் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் தங்கள் நிலையில் பிடிவாதமாக இருந்ததால்,  நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக பாராளுமன்றம் 4-வது நாளாக இன்றும் முடங்கியது குறிப்பிடத்தக்கது

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article