சென்னை
சென்னையில் கோயம்பேடு பாலத்துக்கு கீழ் ரூ.10 கோடி மதிப்பில் இய’ற்கை வனப்புடன் ஒரு பூங்கா மிக உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை, கோயம்பேட்டில் உள்ள சாலை சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பிறகு அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம், ”தமிழகச் சட்டமன்ற பேரவையில் 2023-24ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளைத் தமிழ்நாடு முதலமைச்சர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்றத் தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 22 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம்.
அப்படி அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளைச் செயல்படுத்தும் விதமாக கோயம்பேடு பாலத்திற்கு கீழே இருக்கின்ற நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் இயற்கை வனப்புடன் பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இதைப்போல, சென்னை, தியாகராய நகர், சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு என்று தனி மைதானம், டென்னிஸ் கோர்ட் மற்றும் பூங்கா வசதி, உடற்பயிற்சி கூடம் போன்றவற்றை ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
மேலும் சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் அருகிலுள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் மற்றும் ஒரு மினி விளையாட்டு மைதானத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கின்றோம். விரைவில் இப்பணிகள் தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை தீவுத்திடலில் உள்ள சுற்றுலா பொருட்காட்சியில் உள் விளையாட்டு அரங்கம் அமைத்தல், கிழக்கு கடற்கரைச் சாலையிலே 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு மிதிவண்டி பாதை அமைத்தல், கடற்கரை பார்வதி நகர் முதல் எண்ணூர் கடற்கரை பகுதியில் 5 கி.மீ. நீளத்திற்கு அழகுபடுத்துதல் மற்றும் மகாபலிபுரத்தில் பேருந்து நிலையம் அமைத்தல் போன்ற பணிகளும் இதில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பணிகளை விரைவுபடுத்துகின்ற நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலுடன் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது ” எனத் தெரிவித்துள்ளார்.