சென்னை: பெற்றோர்களே, பயப்படாமல் உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புங்கள்; பள்ளிகளில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்று  தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

தமிழ்நாட்டில் முதல்கட்டமாக  நாளை (செப்டம்பர் 1ந்தேதி) முதல்  9ம் வகுப்பு  முதல் 12 ஆம் வகுப்பு வரை மற்றும் கல்லூரில மாணாக்கர்களுக்கு கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது. அதற்கான வழிகாட்டு நெமுறைகள் வெளியிடப்பட்டு, பள்ளிகளும் சுத்தப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ், திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். நாளை பள்ளி தொடங்க உள்ளதால், அங்கு எடுக்கப்பட்டு வரும்  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை என்பது குறித்து அங்குள்ள ஆசிரியர்களிடம் கேட்டறிந்ததார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.

காலை 9.30 மணியில் இருந்து 3.30 வரை ஒருநாளைக்கு 5 வகுப்புகள் மட்டுமே செயல்படும், ஒவ்வொரு மேஜையிலும் தலா 2 மாணவர்கள் மட்டுமே அமர்வார்கள். தற்போதைக்கு பள்ளிகளில் விளையாட்டு நேரம் கிடையாது.

பள்ளிகள் திறக்கப்படுவதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பள்ளிகள், தலைமை ஆசிரியர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன்,  மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும், ஒருவேளை முகக்கவசம் கிழிந்து விட்டால் மாற்று முகக்கவசம் வழங்கும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளிலும் முகக்கவசம் வைத்திருப்பதற்கு அறிவுறுத்தி உள்ளோம் .

பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பயப்பட வேண்டாம். அனைவருமே பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பள்ளிக்கு வரக் கூடிய மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதிசெய்வது அரசின் கடமை என அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.