திருமயிலை என்றும், கபாலீச்சரம் என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூரில் அமைந்துள்ள சிவன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், அம்பாள், கற்பகாம்பாளாகவும் அருள்பாலிக் கின்றனர்.

இந்த கோவிலில்  கபாலீசுவரர், கற்பகவல்லி இருவருக்கும் தனித்தனியான இரண்டு கோயில்களையும், பல்வேறு பரிவார மூர்த்திகளுக்கான கோயில்களும், கோவிலை சுற்றி  நாற்புறமும் மாடவீதிகளையும், அழகிய கோபுரங்கள், திருக்குளம் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.

பிரசித்தி பெற்ற மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா கடந்த 21ந்தேதி கிராம தேவதை பூஜையுடன்  தொடங்கி 22ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து  ஒவ்வொரு நாளும் திஅலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இன்று 7வது நாள் திருவிழாவையொட்டி திருத்தேர் பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலை  மாட வீதிகளில் திருத்தேர் ஆடி அசைந்து வந்ததை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலையில் திரண்டிருந்தனர்.

இன்று  காலை 6 மணிக்கு தமிழக அமைச்சர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து தேர் பவனியை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

இன்றைய தேரோட்டத்தில் 5 தேர்கள் பவனி சென்றது. முதலில் விநாயகர் தேர் சென்றது. இதனையடுத்து கபாலீஸ்வரர் திருத்தேர் சென்றது. பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்த கற்பகாம்பாள் தேர், முருகன் தேர், ஆஞ்சநேயர் தேர் என 5 தேர்கள் வரிசையாக மாட வீதிகளில் ஆடி அசைந்து சென்றன.

இதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதையடுத்து நாளை  கபாலீஸ்வரர், 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா நாளை நடைபெற உள்ளது. இதை காண லட்சக்கணக்கானோர் மயிலையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், ஐந்திருமேனிகள் விழாவும் நடக்கிறது.

வரும் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர தினத்தன்று கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

மயிலை பங்குனி பெரு விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.