பழனி: தைசப்பூசத்தையொட்டி, பழனி முருகன் கோவிலில்  உண்டியல்கள் மூலம் 5 கோடியே 9லட்சத்து 80ஆயிரம் ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் சில்லரைகள் எண்ணும் பணி இன்றும்  நடைபெற உள்ளது.

அறுபடை வீடுகளில் முக்கியமான மற்றும் அதிக மக்கள் கூடும் இடம் பழனி மலை. இங்குள்ள முருகன், போகரால் வடிவமைக்கப்பட்ட மருத்துவ குணமுடையது. இதனால், இங்குள்ள முருகனை தரிசித்தால், வேண்டுவோரின் நோய் நொடிகள் குணமாகி வாழ்வில் சுபிட்சம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இக்கோவில்,  திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலை மீது சென்று சுவாமி தரிசனம் செய்யும் போது காணிக்கை செலுத்துவதற்க்கு வசதியாக மலையடிவாரம் பாதவிநாயகர் கோவில் முதல் மலைகோவில் வரை பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் இங்கு தைப்பூசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. அப்போது பல லட்சம் பக்தர்கள் பழனி வந்து முருகனை தரிசித்து சென்றனர். இதனால் பக்தர்களிடம் இருந்து வசூலான உண்டியல் காணிக்கை தற்போது திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகிறது.

கடந்த இரு நாட்களாக நடைபெற்ற உண்டியில் வசூல் எண்ணிக்கை இதுவரை,  5 கோடியே 9 லட்சத்து 80 ஆயிரத்து 479 ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 894 கிராமும், வெள்ளி 29 ஆயிரத்து 417 கிராமும், வெளிநாட்டு கரன்சி 2,372 நோட்டுகளும் வருவாயாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணும் பணி நாளையும் தொடர்ந்து நடைபெறும் என திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.