ஸ்ரீநகர்,
காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்திய எல்லைப்பகுதிகள் முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர்.
பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கியதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்று அங்குள்ள  பயங்கரவாதிகள் முகாம்களை தகர்ந்தெறிந்தனர். இந்த அதிரடி தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
poonj
இதன் காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியை ஒட்டிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று மாலை  4.30 மணி அளவில் காஷ்மீரின் ராஜோரி – பூஞ்ச் செக்டாரில் இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் தானியங்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டும்,  சிறிய ரக பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.
நமது ராணுவ வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெகுநேரம் நீடித்தது. இதில் நமது ராணுவ தரப்பில் வீரர்கள் யாரும் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகவில்லை.
இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் கடந்த 20 நாட்களில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி 30 முறை தாக்குதல் நடத்தி இருக்கிறது.
நேற்று இரவு நவ்ஷேராவின் லாம் பட்டாலியன் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதேபோல் கடந்த 16-ந்தேதி நடத்திய துப்பாக்கி சூட்டில் ராணுவ வீரர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிற்கு எதிரான மறைமுக போரை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், தீவிரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ வசதியாக இந்திய படைகளை திசைதிருப்புவதற்காக அடிக்கடி இந்திய நிலைகள் மீது தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.