இஸ்லமாபாத்:

ஈரான் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதில் 14 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாகவும், ஊடுருவலை தடுக்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஈரான் அரசுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை எழுதியுள்ள கடிதத்தில், “ஈரானை ஒட்டியுள்ள பலுசிஸ்தான் மாகாணத்திலிருந்து புதிதாக பலூச் தீவிரவாத குழு உருவாகியுள்ளது.

இந்த குழு பாகிஸ்தானிலிருந்தும், ஈரானின் பலுசிஸ்தானிலுருந்தும் இயங்குகிறது. இரு நாடுகளிலிருந்தும் இந்த தீவிரவாதக் குழு விடுதலை கேட்டு போராடி வருகிறது.

இந்த குழுவினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 14 அப்பாவி பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டனர். இது மிகவும் மோசமான சம்பவம். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது.

பலூச் தீவிரவாதிகள் எல்லையில் ஊடுருவுவதை ஈரான் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று ஈரானுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சென்று வந்த நிலையில், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இத்தகைய கடிதத்தை அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.