ஏப்ரல் 22ம் தேதி பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத போரில் பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மற்றும் இந்திய அரசு இதுவரை அங்கீகரிக்காத ஆப்கானின் தாலிபான் நிர்வாகம் ஆகிய இரண்டு நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக குரல் கொடுத்துள்ளன.

இதையடுத்து பயங்கவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூற பலகட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பியுள்ள பிரதமர் மோடி மறுபுறம் இந்திய மக்களிடம் தனது அரசின் நிலைப்பாட்டை விவரித்து வருகிறார்.

அந்தவகையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானிரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியாவின் வளர்ச்சியைக் கண்டு உலகமே வியக்கிறது” என்று கூறினார்.

26000 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அர்ப்பணித்த பிரதமர் மோடி பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பெருமைபொங்க பேசினார்.

“ஏப்ரல் 22 அன்று, பயங்கரவாதிகள் நமது சகோதரிகளின் நெற்றிப் பொட்டை (சிந்தூர்) அழித்தனர், பஹல்காமில் துப்பாக்கி குண்டுகள் வெடித்தன, அந்த வலியை 140 கோடி இந்தியர்களும் உணர்ந்தனர், பயங்கரவாதிகள் அழிக்கப்படுவார்கள் என்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒன்றுபட்ட உறுதிமொழியை எடுத்திருந்தனர்.

நமது படையினரின் வீரத்தால் அவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டது. முப்படையினருக்கும் அதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் வகுத்த சக்கரவியூகத்தால் பாகிஸ்தான் மண்டியிட்டது.” என்று கூறினார்.

பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்கள் மீது நடத்தப்பட்ட 22 நிமிட தாக்குதலில் பாகிஸ்தான் ஆட்டம் கண்டதாக கூறிய பிரதமர் மோடி ‘சிந்தூர்’ வெடிமருந்தாக மாறினால் என்னவாகும் என்பதை நமது படையினரின் சக்கரவியூகம் பாகிஸ்தானுக்கு உணர்த்தியுள்ளதாத் தெரிவித்தார்.