இஸ்லாமாபாத்:

புல்வாமா பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்களை அழித்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே  போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய உள்ள தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், நாளை விடுதலை செய்யப்படுவார் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவுடனான சமாதான நடவடிக்கையின் முன்னோடியாக அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார் என்று அறிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய வீரர் அபிநந்தனை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவரை கொடுமைப்படுத்தக்கூடாது, ஜெனிவா ஒப்பந்தப்படி நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. அதையடுத்து, பாகிஸ்தான் தூதரை நேரில் வரவழைத்தும் எச்சரிக்கை விடுத்தது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், உலக நாடுகள் இரு தரப்பினரையும் அமைதியாக இருக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அமெரிக்கா இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை கண்டித்த நிலையில், போர் பதற்றம் வேண்டாம் என்றும் கூறியது. பாகிஸ்தானிடம் பயங்கரவாதிகள் முகாம்களை அழித்து ஒழிக்கவும் வற்புறுத்தியது.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இன்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், நேற்று மாலை இந்திய பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேச முயற்சி செய்ததாகவும், ஆனால், அவர் போனில் பேச தயாராக இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்தியாவுடனான சமாதான நடவடிக்கைக்கு முன்னோடியாக  கைது செய்யப்பட்டுள்ள இந்திய வீரர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

நாளை வாகா எல்லையில் அபிநந்தன் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அபிநந்தன் குடும்பத்தினர் உள்பட இந்திய மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரரான அபிநந்தன்,  காஷ்மீரில் நேற்று நடத்திய தாக்குதலின் போது, பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் மற்றும், 2 பாக். விமானிகளையும் சுட்டு வீழ்த்தியுள்ளார் . அதையடுத்தே அவரது மிக்-21 விமானம் பாக். ராணுவத்தினரால் தாக்கப்பட்ட நிலையில்,பாகிஸ்தானிடம் பிடிபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அபிநந்தன் விவகாரத்தை வைத்து பாஜக ஆடுபுலி ஆட்டம் ஆடி வந்த நிலையில், இம்ரான் கானின் அறிவிப்பு  பாஜவினருக்கு பெருத்த அடியாக அமைந்துள்ளது.