சென்னை

பாகிஸ்தானியர்களால் சிறை பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் விரைவில் நலமுடன் திரும்புவார் என அவர் தந்தை வர்தமான் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று இந்தியா பாகிஸ்தான் இடையில் நடந்த விமானப்படை தாக்குதலில் விங் கமாண்டர் அபிநந்தன் சென்ற விமானம் பாகிஸ்தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.   அந்த விமானத்தை செலுத்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.   அபிநந்தனின் தந்தை வர்தமான் முன்னாள் விமானப்படை அதிகாரி (ஏர் மார்ஷல்) ஆவார்.

வர்தமான் இன்று அளித்த அறிக்கையில், “எனது மகனின் துணிகர செயலினால் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.  அவர் பேசிய வீடியோவில் உண்மையான போர் வீரர் எப்படி பேசுவாரோ அப்படி பேசி உள்ளார்.   தன்னை சிறை பிடித்ததால் எவ்வித பயமும் காட்டாமல் அவர் பேசியது பாராட்டுக்குறியது.

அவரை யாரும் துன்புறுத்தாமல் இருக்கவும் சீக்கிரம் வீடு திரும்பவும் நான் பிரார்த்தனை செய்து வருகிறேன்.   ஆகவே அவர் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என நம்புகிறேன்.  எனக்கு தற்போது ஆதரவு அளித்து வரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அபி உயிருடன் இருக்கிறார்,  காயமடையவில்லை,  நல்ல மனநிலையில் உள்ளார். ஒரு உண்மையான போர் வீரனாக துணிவுடன் நடந்துக் கொள்கிறார்   நான் அவர் தகப்பன் என்பதில் பெருமை கொள்கிறேன்.    நீங்கள் அனைவரும் அவருக்கு ஆசி அளிப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

நானும் உங்களைப் போல் அவர் விரவில் நலமுடன் வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்.    இந்த நேரத்தில் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அன்பும் ஆதரவும் அளித்து வரும் அனைத்து பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள் ஆதரவு எங்களுக்கு மேலும் சக்தியை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அபிநந்தன் விடுதலை செய்யப்படுவதாக செய்திகள் வருவதாக தற்போது வந்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன