லாகூர்:

பாகிஸ்தான் தலிபான் பிரிவின் ஜமாத் உர் அஹரர் அமைப்பை சேர்ந்த 10 தீவிரவாதிகள் லாகூரின் கிழக்கு நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி 13ம் தேதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியும் இதில் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

இது குறித்து போலீசார் கூறுகையில், “நாங்கள் 5 தீவிரவாதிகளை கைது செய்து வைத்திருந்தோம். அவர்கள் கூறிய தகவல்களின் அடிப்படையில் லாகூரின் புறநகர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தவதற்காக அவர்களை அழைத்துச் சென்றோம். அப்போது எங்களது பிடியில் இருந்த தீவிரவாதிகளை தப்பிக்க வைப்பதற்காக அங்கு பதுங்கியிருந்த 9 தீவிரவாதிகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர்’’ என்றார்.

மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘இதை தொடர்ந்து அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினோம். முன்னதாக சரண்டராகுமாறு அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சண்டை ஒய்ந்த பிறகு 10 தீவிரவாதிகள் இறந்தது தெரியவந்தது. இதில் எங்களது கஸ்டடியில் இருந்த ஒரு தீவிரவாதியும் பலியானார்.

அவர் லாகூரில் கடந்த பிப்ரவரியில் நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர். தற்கொலை படையை சேர்ந்த நபருடன் இவர் வந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார்’’ என்று தெரிவித்தனர்.

லாகூரில் உள்ள ராணுவ கணக்கெடுப்பு குழு மீது நடந்த தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்தே தீவிரவாதிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி 10 பேரை கொன்றுள்ளனர்.

பாகிஸ்தானில் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த தொடர் தாக்குதல் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அடங்கியிருந்த வன்முறை மீண்டும் தலைதூக்க தொடங்கியது. இதனால் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு அழுத்தம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று லாகூர் பூங்காவில் நடந்த குண்டுவெடிப்பில் 70 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2 தினங்களுக்கு முன் லாகூர் அருகே நன்கானானில் காரில் சென்ற அஸ்ஃபக் அகமது என்ற ஓய்வுபெற்ற கால்நடை மருத்துவரை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தான்.

செக்ட் உறுப்பினர்களாக உள்ள அகமதிகள் தங்களை முஸ்லிம்கள் என்று கூறி வருகின்றனர். பாகிஸ்தான் உருது சட்டப்படி அகமதிகள் முஸ்லிம்கள் என்று கூறிக் கொள்ளக் கூடாது. இதற்கு கடுமையான தண்டனைகள் விதிப்பதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. இவர்களை குறிவைத்து தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சிந்து மாகாணத்தின் தெற்கு பகுதியில் கடந்த பிப்ரவரியில் நட்நத தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். இதைதொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த மோதல் அருகில் உள்ள ஆப்கானிஸ்தானில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலிபான்களுக்கு ஆப்கன் அரசு அடைக்கலம் கொடுப்பதாகவும், ஆப்கன் தலிபான்களுக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்வதாகவும் மாறி மாறி குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது. ஆப்கனில் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்துள்ளது.