இஸ்லாமாபாத்: ஐஎம்எஃப் அமைப்பிடம் பட்டிருக்கும் கடனைவிட, சீனாவிடம் இரண்டு மடங்கு அதிகமாய் கடன்பட்டிருக்கிறது பாகிஸ்தான் என்று தகவல்கள் கூறுகின்றன.

தனது அன்னிய செலாவணி கையிருப்பை அதிகப்படுத்தி சேமிக்கவும், நிதியிருப்பு இடைவெளியை குறைக்கவுமே கடன்பட்டு வருகிறது பாகிஸ்தான் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மூன்று ஆண்டுகளில் சீனாவிடமிருந்து வணிகக் கடன்களாக 6.7 பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றுள்ளது பாகிஸ்தான் என்று ஐஎம்எஃப் அறிக்க‍ை கூறுகிறது. சமீபத்தில் பாகிஸ்தானின் நிதி நெருக்கடியை களைய, புதிய கடன் திட்டத்தை முன்னெடுத்தது ஐஎம்எஃப் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு கடன் செலுத்த வேண்டிய அதேகாலகட்டத்தில், வேறுபல கடன் வழங்குநர்களுக்கு பாகிஸ்தான் சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாம்.

சீனாவின் வணிக உள்கட்டமைப்புத் திட்டங்களால் அதிக பயனடைந்துள்ள நாடு பாகிஸ்தான் என்று கூறலாம். சீனாவிடமிருந்து பெரும் தொகையைக் கடனாகப் பெற்றாலும், பாகிஸ்தானின் பிரச்சினைக்கு அது போதவில்லை. எனவே, ஐஎம்எஃப் அமைப்பிடமும் கையேந்தும் நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.