வாஷிங்டன்: தேர்தலில் தன்னை எதிர்கொள்ள பயந்து தன்மீது அவதூறுகளைப் பரப்பி, தன் குடும்பத்திற்கு களங்கம் கற்பிக்க முயன்று வருகிறார் அதிபர் டொனால்ட் டிரம்ப் என்று கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் துணை அதிபரும், அடுத்தாண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான ஜோ பைடன்.

அதிபர் டிரம்ப் மற்றும் அவரின் சகாக்கள் தங்களின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“நான் எங்கும் போய்விடப்போவதில்லை. நீங்கள் என்னை அழித்துவிடப் போவதில்லை மற்றும் அல்லது எனது குடும்பத்தை நீங்கள் ஒழித்துவிடப் போவதில்லை. இதை டிரம்பும் அவருடைய அடிவருடிகளும் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

“எதிர்வரும் அதிபர் தேர்தலை நினைத்து டிரம்ப் அஞ்சுகிறார். அவர்மீது கொண்டுவரப்பட்டுள்ள கண்டனத் தீர்மானமும் பதற்றத்திற்கு காரணம். அடுத்த நவம்பரில் நான் அவரை தோற்கடித்து விடுவேன் என்று அஞ்சுகிறார்” என்று மேலும் கூறினார் ஜோ பைடன்.

ஜோ பைடனின் மகன் உக்ரைன் நிறுவனம் ஒன்றுக்காக பணிபுரிந்த விஷயத்தைக் கையில் எடுத்து, அதன்மூலம் ஆதாயம் அடைவதற்காக ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்பதான ஒரு விசாரணை அமெரிக்க அரசின் சார்பில் துவக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக உக்ரைன் அதிபரும் தனது நாட்டில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.