லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் கோட்டையின் அருகே, பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கின் முழு உருவச்சிலை, அவரின் 180வது இறந்த தினத்தை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது.

மேலும், அந்த இடத்தினருகே ரஞ்சித் சிங்கின் சமாதி மற்றும் இதர முக்கிய அம்சங்கள் அமைந்துள்ளன. அந்த இடம் மெய் ஜிந்தியான் ஹவேலி என்று அழைக்கப்படுகிறது. ஹவேலி என்பது ரஞ்சித் சிங்கினுடைய இளைய ராணிகளுள் ஒருவரின் பெயர்.

மேலும், அந்த இடத்தில் நிரந்தரமான சீக்கிய அருங்காட்சியகம் ஒன்றும் அமைந்துள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள சிலையானது, ஒரு குதிரையின் மீது ரஞ்சித் சிங் அமர்ந்திருப்பது போன்ற முழு உருவச்சிலை ஆகும்.

கடந்த 1801 முதல் 1839ம் ஆண்டுவரை பஞ்சாபை ஆட்சிசெய்த ரஞ்சித் சிங், பிரிட்டிஷ் அரசிற்கு பெரும் சவாலாக விளங்கியவர். இத்தகைய நடவடிக்கைகள் மதம்சார்ந்த சுற்றுலாவை மேம்படுத்துவதற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்று பாகிஸ்தான் அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

கர்தார்பூர் காரிடார், நன்கானா சாகிப் ஆகியவற்றின் வரிசையில் தற்போது, ராஜா ரஞ்சித் சிங் சிலையும் திறக்கப்படவுள்ளது. சீக்கிய சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காகவே பாகிஸ்தான் தரப்பில் இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்நாட்டு அரசுத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.