கொழும்பு:

இலங்கை ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு காரணமாக 176 குழந்தைகள் பெற்றோர்களை இழந்து அனாதையாகி உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்து உள்ளது.

ஸ்டர் பண்டிகையன்று கொழும்பு தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதி கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 258 பேர் உயிரிழந்து இருப்பதாக இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு காரணமாக 176 குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர் என்று அந்நாட்டு கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம்  21ம் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று, தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்கள் உட்பட,  7 இடங்களில், தற்கொலை மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தன. இதில் 258 பேர் பலியாகியதாக கூறப்பட்டது. மேலும்; 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இலங்கையை சேர்ந்த உள்ளூர் பயங்கரவாத அமைப்புடன் சேர்ந்து ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் இந்த தாக்குதலை நடத்தியது தெரிய வந்தது.

உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து, பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், கார்டினல் மால்கம் ரஞ்சித்,இத்தாலி தலைநகர் ரோம் சென்று, அங்கு போப் பிரான்சிசை சந்தித்து ஈஸ்டர் தின தாக்குதல் குறித்தும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் குறித்தும் பேசினார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கார்டினல் மால்கம் ரஞ்சித், இலங்கையில் சேதம் அடைந்த தேவாலயங்களை சீரமைக்கும் பணிகளை அரசாங்கம் செய்து தருகிறது. எனவே அதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை.

இந்த கொடூர தாக்குதலில் 176 குழந்தைகள் தங்கள் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையுமே இழந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் பணிகளில், கத்தோலிக்க திருச்சபை ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.