வயநாடு: ராகுல் காந்தியின் வயநாடு கூட்டத்தில் பறந்த கொடிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கொடிகள்தான் என்றும், பாகிஸ்தான் கொடி அல்ல என்றும் தெரியவந்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் தனது தங்கை பிரியங்கா காந்தியுடன் சென்று, கேரளாவின் வயநாடு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கலந்துகொண்ட கூட்டத்தினர் மத்தியிலே, பாகிஸ்தானின் தேசிய கொடிகள் பறந்தன என்று புகார்கள் எழுந்தன.

மேலும், காங்கிரஸ் கட்சியின் கொடிகளைவிட, முஸ்லீம்களின் கொடிகளே அதிகம் தென்பட்டதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

ஆனால், கேரளாவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றிருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியின் கொடியைத்தான், பாகிஸ்தான் கொடியென்று, விபரம் புரியாதவர்கள் கூறுகிறார்கள் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், பச்சை வண்ண பின்புலத்தில், வெள்ளைநிற பிறைவடிவ நிலா மையத்திலும், அதற்கு சற்றுமேலாக, வெண் நட்சத்திரமும் இடம்பெற்றிருக்கும் கொடியானது, இந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாமிய இயக்கங்கள் பொதுவாக பயன்படுத்தும் கொடியாகும்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடியில், பச்சைநிற பின்புலத்தில், அந்தப் பிறையும் நட்சத்திரமும், இடதுஓரம் மேல்புறமாக இடம்பெற்றிருக்கும்.

எனவே, இந்த வேறுபாடுகளை அறியாத நபர்கள் அல்லது தெரிந்தும் வேண்டுமென்றே பிரச்சினையை கிளற விரும்பும் ஆட்களே, இப்படி அபத்தமான குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள் என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி