இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் என அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதன் காரணமாக எதிர்கட்சிகள், பிரதமர் இம்ரான்கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர முனைப்பு காட்டி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 3-ஆம் தேதி பிரதமர் இம்ரான் கான் அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த, பாகிஸ்தான் தேசிய சட்டசபையின் நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில், பிரதமர் இம்ரான் கான் சட்டசபைக்கு வரவில்லை. இதனால், பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறாது என நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம்கான் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும் என அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரை செய்தார். இந்நிலையில், பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று அதிபர் ஆரிப் ஆல்வி நாடாளுமன்றத்தைக் கலைத்தார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு 3 மாதத்துக்குள் தேர்தல் நடத்த அதிபர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி எதிர்க்கட்சிகள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பிரதமர் அறிவுறுத்த முடியாது என்றும், பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றம் செயல்படுவதற்கு தடையில்லை என்றும், நாளை மறுநாள் (ஏப்.9) ஆம் தேதி காலை 10 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.