இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கான பாகிஸ்தானின் புதிய ஹை கமிஷனராக முயீன் – உல் – ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஃபிரான்ஸ் நாட்டில் பாகிஸ்தான் தூதராக பணியாற்றி வந்தார்.

இந்திய ஹை கமிஷனராக இருந்த சொஹைல் மெஹ்மூத், பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட காலியிடத்தை தற்போது நிரப்பியுள்ளார் ஹக்.

இம்ரான் கான் அரசு பதவியேற்றதிலிருந்து பல நாட்டு தூதுவர்கள் நியமனம் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், தற்போது 24க்கும் மேற்பட்ட தூதுவர்கள் நியமனத்தை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் அங்கீகரித்துள்ளார்.

நக்மானா ஹாஷ்மி என்ற வெளியுறவுத் துறை அதிகாரி சீனாவுக்கான பாகிஸ்தான் தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் குரைஷி தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய தூதுவர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் தரப்பை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்தி செயலாற்றுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார் வெளியுறவு அமைச்சர் குரைஷி.