ஜார்ஜியா

ஜார்ஜியா பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் பட்டம் பெற்ற ஒரு கருப்பின அமெரிக்கர் தான் படித்த கல்லூரியின் மாணவர்களின் கல்விக் கடனை தாம் தருவதாக வாக்களித்துள்ளார்.

அமெரிக்காவில் கல்விக் கட்டணங்கள் மிகவும் அதிகமானவை ஆகும்.   அதனால் அங்கு கல்வி பயிலும் பெரும்பாலான மாணவர்கள் கடன் பெற்று கல்வி பயின்று வருகின்றனர்.    பல மாணவர்கள் தங்கள் கல்விக் கடனை தீர்க்க பல வருடங்கள் உழைக்க வேண்டி உள்ளது.     இது மாணவர்களுக்கு மிகவும் சுமையாக அமைகிறது.

அட்லண்டா மாநிலத்தில் உள்ள ஜார்ஜியா நகரில் உள்ள பிளாக் மோர்ஹவுஸ் கல்லூரியில் கடந்த ஞாயிறு அன்று பட்டமளிப்பு விழா நடந்தது.   இந்த கல்லூரியில் கருப்பின அமெரிக்கர்கள் அதிக அளவில் பயில்கின்றனர்.    இந்த கல்லூரியில் கடந்த 2000 ஆம் வருடம் படித்து பட்டம் பெற்ற மாணவர் ராபர்ட் எஃப் ஸ்மித் என்பவர் ஆவார்.

இவர் பட்டம் பெற்ற பிறகு தொழிலதிபராகி கடந்த 2015 ஆம் வருடம் அமெரிக்காவின் மிகப்பெரிய கருப்பின செல்வந்தர் ஆனவர்.   இவர் தனது கல்லூரிக்கு ஏற்கனவே  15 லட்சம் டாலர்கள் நன்கொடை அளித்துள்ளார்.          இந்த பட்டமளிப்பு விழாவில் ஸ்மித்துக்கு கவுரவ பட்டம் வழங்கப்பட்டது.

அப்போது அவர் இந்த வருடம் பட்டம் பெறும் அனைத்து மாணவர்களின் கல்விக் கடனையும் தாம் அளிப்பதாக அறிவித்தார்.   இதற்கு 400 மாணவர்களிடம் இருந்து மட்டும் அல்லாமல் மாணவர்களின் பெற்றோர்களிடமும் இருந்து கைத்தட்டல்கள் கிடைத்தன.    இதனால் இவருக்கு சுமார் 4 கோடி டாலர்கள் செலவாகும் என கூறப்படுகிறது.

இது குறித்து இந்த கல்லூரியின் ஊழியர் ஒருவர், “இந்த கல்லூரியின் சரித்திரத்தில் இது போல நடப்பது இதுவே முதல் முறையாகும்.   இதனால் 400 மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.