தய்பூர்

த்திய அரசு அளிக்கும் ஜி எஸ் டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.

நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின்  சிந்தனை கூட்டம்’ ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தொடங்கியது.   இது 3 நாட்களுக்கு நடைபெறும்.  இக்கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்கின்றனர்.. கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் மற்றும் அடுத்தடுத்து வரும் சட்டப்பேரவை மற்றும் 2024 மக்களவை பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் செய்தியாளர்களிடம், “தற்போதைய இந்தியப் பொருளாதாரம் மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதுதான், மத்தியில் கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசின் தனிச்சிறப்பு ஆகும்.

நாட்டில் பணவீக்கம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் உயர்ந்து வருகிறது. மத்திய அரசு தனது தவறாக கொள்கைகள் மூலம் பணவீக்க உயர்வை மேலும் ஊக்குவிக்கிறது.   இதை சமாளிக்க வழி தெரியாமல் மத்திய அரசு திணறுகிறது. உடனடியாக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தற்போது சமுதாயத்தில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு, விளிம்பு நிலையில் உள்ள 10 சதவீத மக்கள் தொகையில் நிலவும் மோசமான வறுமை, சர்வதேச பசி குறியீட்டில் 2021-ல் இந்தியாவின் நிலை (116-ல் 101), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் புதிய கொள்கைகள் இருக்க வேண்டும்.

மத்திய அரசு கடந்த 2017-ல் ஜிஎஸ்டி நடைமுறையை முறையாகத் திட்டமிட்டு அமல்படுத்தாததே இப்போதைய பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் ஆகும்.  மத்திய அரசு ஜிஎஸ்டி அமலானபோது மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது.  வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், இதை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்.” எனக் கூறி உள்ளார்.