டில்லி

காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது டிவிட்டரில் தமிழ் மொழியைப் புகழ்ந்து பதிந்துள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நிகழ்வில் இந்தி மொழியை நாட்டின் ஒரே மொழியாக மாற்ற வேண்டும் எனப் பேசியது கடும் சர்ச்சையை உண்டாக்கியது.    நாட்டில் இந்தி பேசாத மக்கள் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  எதிர்க்கட்சியினரும் அமித்ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்தனர்.

நாடெங்கும் எழுந்த எதிர்ப்புக்குப் பிறகு அமித் ஷா தாம் மாநில மொழிகளுக்கு எதிராக இந்தி மொழியைத் திணிக்கும் எண்ணத்தில் பேசவில்லை எனவும்  இந்தி மொழியை இரண்டாம் மொழியாக நாடு முழுவதும் பேசினால் தொடர்பு எளிதாகும் எனக் கூறியதாக விளக்கம் அளித்தார்.

அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் நடந்த ஹவ்டி மோடி நிகழ்வில் பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள பல்வேறு மொழிகள் இந்தியாவின் அடையாளங்கள் ஆகும் எனவும் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அவை மிகவும் உதவுவதாகவும் புகழ்ந்தார்.

முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம் தற்போது ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் தனது குடும்பத்தினர் மூலம் தனது டிவிட்டர் கணக்கை இயக்கி வருகிறார்.

ப சிதம்பரம் தனது குடும்பத்தினர் மூலம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், “தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து ஒருமித்த குரலில் பேசினால் தமிழ் மொழியின் பெருமையையும் கலாச்சாரத்தையும் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது ஐநா சபை உரையில் பழம்பெரும் தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் வரியைப் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.