சென்னை

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்கள் அக்டோபர் 15க்குள் பழுது பார்க்கப்பட உள்ளது.

சென்னை நகரில் பல சாலைகள் செப்பனிடப்படாததால் மேடு பள்ளங்களுடன் குண்டும் குழியுமாக இருந்து வருகின்றன.   இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு அடைகின்றது.   அத்துடன் சமீபத்தில் பெய்த மழையால் இந்த சாலைகளில் நீர் தேங்கி பல விபத்துக்களும் நிகழ்ந்து வருகின்றன.

இவ்வாறு சேதம் அடைந்த சாலைகள் குறித்து ஏராளமான புகார்கள்  மாநகராட்சி அலுவலகங்களுக்கு வருவது  அதிகரித்து வருகிறது.   அத்துடன் மழைக்காலம் நெருங்கி வருவதால் சாலைப் பள்ளங்களால் பெரும் விபத்துக்கள் உண்டாகவும் வாய்ப்புள்ளது.   நகரில் மொத்தம் 471 பேருந்து சாலைகளிலும் 33000 உட்சாலைகளும் பாதிப்பு அடைந்துள்ளன.

இதையொட்டி சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கோவிந்த ராவ்,  “சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் சீரழிவுகளைச் சீர் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.    ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சாலைகள் சீரமைப்புப் பணிகள் அந்தந்த பகுதி ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மூலம் சரி செய்யப்பட உள்ளன.

இந்தப் பணிகள் அக்டோபர் 15க்குள் முடிவடையும்.  வரும் அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு சாலையில் எந்த ஒரு துறையும் தங்கள் பணிகளுக்காக தோண்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.  இதற்கான பணிகளை அக்டோபர் 1 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.   அதற்குப் பிறகு எந்தத் துறைக்கும் அனுமதி அளிக்கப்பட மாட்டது” எனத் தெரிவித்துள்ளார்.