சென்னை

முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் பிரதம்ர் மோடி கச்சத்தீவு பிரச்சினை மூலம் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களைத் திசை திருப்புவதாக  கூறி உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்,

அந்த பேட்டியில் ப சிதம்பரம்,

” அனைத்து மாநிலங்களிளும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்,. அங்கு பாஜகவுக்கு எதுவும் கிடைக்காது.

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசுகளுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் 2019-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்ததை விட அதிக இடங்கள் காங்கிரசுக்கு இந்த முறை கிடைக்கும்.

மற்ற மாநிலங்களிலும் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த முறை கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றும். அரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் டெல்லி மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கச்சத்தீவு விவகாரம் ஒரு முடிந்துபோன பிரச்சினை. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக மோடி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை?  தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவுமே இந்த பிரச்சினையை அவர் தற்போது எழுப்பி இருக்கிறார். மேலும் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களைத் திசை திருப்பவுமே இந்தப் பிரச்சினையை அவர் கையில் எடுத்து உள்ளார்”

என்று அவர் கூறினார்.