சென்னை

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் விளம்பரத்துக்கு அனுமதி மறுத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிம்ன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளார்

அந்த மன்வில் ஆர் எஸ் பாரதி,

“தேர்தல் விளம்பரங்களை வெளியிடும் முன்பாக தேர்தல் ஆணையத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அரசியல் கட்சிகள் தாக்கல் செய்யும் தேர்தல் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி, 2 நாட்களுக்குள் பரிசீலித்துச் சான்றளிக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க. சார்பில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை ஆண்டுக்கால ஆட்சியில் செய்யப்பட்டுள்ள முக்கிய சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக தேர்தல் விளம்பரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரங்களுக்கு முன்அனுமதி கோரி மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் தி.மு.க. சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்த மனுக்களைத் தேர்தல் ஆணையம் பரிசீலித்து முடிவு எடுக்க 6 நாட்கள் வரை காலதாமதம் செய்கிறது. சில விண்ணப்பங்களை ஒன்றுமில்லாத அற்ப காரணங்களுக்காக நிராகரித்துள்ளது.

குறிப்பாக, ‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற தேர்தல் விளம்பரத்துக்கு முன்அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை, நாட்டின் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாகக்கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. சார்பில் மேல்முறையீடு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மற்ற அரசியல் கட்சிகளின் விளம்பரங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன்அனுமதி வழங்க மறுத்து மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர் பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்துசெய்ய வேண்டும். அதேபோல தி.மு.க.வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன்அனுமதி வழங்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்”

என்று கூறியுள்ளார்.

நாளை இந்த வழக்கு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது.