டில்லி

மோடியின் தேர்தல் பேரணிகளுக்கு செலவிடும் பணம் எவ்வாறு கிடைக்கிறது என முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் சிவகங்கை மக்களவை தொகுதியில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறறார். இந்த தொகுதியில் கார்த்தி சிதம்பரம் சார்பில் பிரசாரம் செய்ய ஏராளமான பணம் செலவிடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதனால் வருமானவரித் துறையினர் சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வந்தன.

இது குறித்து முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில் பல தொடர் பதிவுகளை பதிந்துள்ளார்.

அதில் அவர், “பிரதமர் மோடி கலந்துக் கொள்ளும் தேர்தல் பேரணிகள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு ஒரு திருமணத்துக்கு ஆகும் அளவுக்கு பணம் செலவிடப்படுகிறது. பிரதமரின் இந்த பேரணிக்கு ஆகும் செலவுகள் அவருடைய கட்சி வேட்பாளர்கள் கணக்கிலோ அல்லது அவரது கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கணக்கிலோ சேர்க்கப்படுகிறதா?

ஒவ்வொரு பேரணியிலும் திருமணத்துக்கு நிகரான பந்தல்கள். பத்துக்கும் மேற்பட்ட எல் ஈ டி திரைகள் என. கோடிக்கணக்கான பணம் செலவாகிறது.   இவ்வளவு பணம் அவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது? எங்கிருந்து வருகிறது? இதற்கு பதில் யார் சொல்வார்கள்?” என வினா எழுப்பி உள்ளார்.

மேலும் அவர், “எனது சிவகங்கை தொகுதியில் உள்ள வீட்டிலும் சென்னை வீட்டிலும் வருமான வரி சோதனை நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. நாங்கள் அந்த சோதனை அதிகாரிகளை வரவேற்க தயாராக உள்ளோம். பாஜக அரசின் இந்த அத்துமீறல்களை கவனித்து வரும் மக்கள் இவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்”என பதிந்துள்ளார்.