தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 14ந்தேதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கோளாறு சரி செய்யப்பட்டு இன்று மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி பணி தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்ததால், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், உச்ச நீதிமன்ற அனுமதியுடன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 12ந்தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.

கடந்த 13ந்தேதி முதற்கட்டமாக 5 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்தது. இது நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜனை விநியோகிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 14ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தில் உள்ள குளிர்விப்பான் இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால் ஆக்சிஜன் உற்பத்தி தடை பட்டது.  தொடர்ந்து,  பழுதான குளிர்விப்பானை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பழுது சரி செய்யப்பட்டு விட்டது.

இதையடுத்து,   மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி இன்று தொடங்கி உள்ளது. இல் ஆக்சிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக பிரத்யேக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.  இன்று (வியாழக்கிழமை)   ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என்று ஆலை வட்டாரங்கள் தெரிவித்தன.