தைபே: கோவிட்-19 வைரஸுக்கு காரணமான SARS-CoV-2 வைரஸில் மறைந்துள்ள புதிய ஜீனை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மறைந்துள்ள ஜீன்தான், கொரோனா வைரஸின் இப்போதைய பாதிப்பூட்டும் தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுவதாக கூறப்படுகிறது.

ஒரு வைரஸ், மொத்தமாக 15 ஜீன்களை மட்டுமே கொண்டுள்ளது. இவற்றைப் பற்றி அதிகமாக அறிந்துகொள்வது மற்றும் ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்த ஜீன்களைப் பற்றியும், ஜீன்களுக்குள் அமைந்த ஜீன்களைப் பற்றியும் அறிந்துகொள்வதானது, ஆபத்தான வைரஸை எதிர்கொள்வதில் நமக்குப் பேருதவி புரியும்.

“ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்த ஜீன்கள்தான், ஒரு வைரஸ் தன்னை வலுவானதாக தகவமைத்துக் கொள்ளவும், தொற்றுபவரின் நோயெதிர்ப்பு சக்தியை முடக்கவும் துணைபுரிகின்றன” என்றுள்ளார் தைவானிலுள்ள அகடமியா சினிகாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர்.

“ஒன்றன்மேல் ஒன்றாக அமைந்த ஜீன்களைப் பற்றியும், அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் தெளிவாக அறிவதன் மூலம், வைரஸ் எதிர்ப்பு மருந்துகளின் மூலம், கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து தெளிவான புரிதலைப் பெற முடியும்” என்றும் அவர் கூறினார்.