மும்பை: கொரோனாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள Pfizer என்ற தடுப்பு மருந்தை -70 டிகிரியில் வைத்திருந்து அதை விநியோகிக்க வேண்டுமென்ற தேவையானது, பல லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களை இக்கட்டில் தள்ளியுள்ளது.

கொரோனாவுக்காக தடுப்பு மருந்து தயாரிப்பதில் பல்வேறு நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. இதனிடையே Pfizer என்ற பெயரில் ஒரு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருந்தை எப்போதும் -70 டிகிரி வெப்பநிலையில் வைக்க வேண்டியது அவசியமாம். எனவே, அதே வெப்பநிலையிலேயே வைத்து, பல இடங்களுக்கும் எடுத்துச்சென்று விநியோகிக்க வேண்டியுள்ளது. இதுதான், இந்திய லாஜிஸ்டிக்(பொருட்களுக்கான போக்குவரத்து) நிறுவனங்களுக்கு பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது.

ஏனெனில், அந்தளவு வெப்பநிலையில் எந்தப் பொருள‍ையும் எடுத்துச் செல்லும் அளவிற்கு, இந்திய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களிடம் வசதியில்லை. அதிகபட்சம் -40 டிகிரி வெப்பநிலையில் பராமரிக்கும் அளவிற்குதான் அவைகளிடம் வசதிகள் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இத்தகைய வெப்பநிலை என்பது உலகின் பல இடங்களுக்குமே பிரச்சினைதான் என்று கூறப்படுகிறது. அதேசமயம், அந்த மருந்திற்கு தேவைப்படும் வெப்பநிலை -17 தான் என்றும் சில செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அது உண்மையெனில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.