வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் அதேவேளையில், அந்நாட்டின் ராணுவ தலைமையகமான பென்டகனில் செய்துள்ள மாற்றமானது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியா? என்ற சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் இந்திய – அமெரிக்க உதவியாளர் காஷ் படேல் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள், பைடன் வெற்றியை ஏற்க மறுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பரவலான முறைகேடு நடந்துள்ளது என்றும், மறு வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்றும் டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவு வட்டத்தினர் சிலர் கூறி வருகின்றனர். அதேசமயம், இந்தக் கருத்தை குடியரசு கட்சியினர் பலரே ஒப்புக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

தேர்தலுக்குப் பிந்தைய சர்வேயில்கூட, 79% மக்கள், ஜோ பைடன் வென்றதாகவே கருதுகிறார்கள். 13% பேர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்னும் முடிவடையவில்லை என்றும், 3% பேர் மட்டுமே டிரம்ப் வென்றதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராணுவச் செயலாளர் மார்க் எஸ்பர் மற்றும் பாதுகாப்புத் துறையின் இதர மூன்று உயரதிகாரிகளை பணிநீக்கம் செய்த டிரம்ப், அப்பதவிகளில் தனக்கு மிகவும் வேண்டப்பட்ட ஆதரவாளர்களை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பாதுகாப்புச் செயலராக(acting) கிறிஸ்டோபர் மில்லர் என்பவரை நியமித்துள்ளார் டிரம்ப்.

அவரின் இத்தகைய செயல்பாடுகள், பெரிய சந்தேகங்களை கிளப்புவதாக உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.