சண்டிகர்:

பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள சாமியார் ராம் ரஹீம் சிங் நடத்தி வரும் தேரா சச்சா சவுதா ஆஸ்ரமத்தின் 30 பிரார்த்தனை கூட்ட மையங்களுக்கு மாநில அரசு சீல் வைத்துள்ளது. வன்முறை சேதத்திற்கு ஈடு செய்ய சொத்துக்களை ஜப்தி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர் ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சாமியாரின் ஆதரவாளர்களிடம் இருந்து ஏகே&47 ரகம் உள்பட 4 துப்பாக்கிகள், ஒரு கை துப்பாக்கி, பெட்ரோல் குண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பஞ்ச்குலா மற்றும் சிஸ்ரா காவல் நிலையங்களில் தேரா ஆதரவாளர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதன் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

‘‘மாநிலத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது தணிந்துள்ளது. புதிதாக எவ்வித வன்முறையும் நடைபெறவில்லை’’ என்று அரசு தெரிவித்துள்ளது. கலவரத்தை தொடர்ந்து பஞ்ச்குலா போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தீர்ப்பு நாள் அன்று தடை உத்தரவை மீறி கூட்டம் கூடியதை தடுக்க தவறியாதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரோக்தக் சிறையில் நாளை தண்டனை அறிவிக்கப்படவுள்ள நிலையில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதில் மாநில அரசு கவனம் செலுத்தி வருகிறது. பஞ்ச்குலாவில் இருந்து சிபிஐ சிறப்பு நீதிபதி ஜெகதீப் சிங் நாளை வான் வழியாக ரோக்தக்கில் உள்ள சுனரியா சிறைக்கு சென்று தண்டனை விபரத்தை அறிவிக்கிறார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக பெட்ரோல் நிலையங்கள், கடைகள், வங்கிகள் அடைக்கப்பட்டிருந்தது. தற்போது வன்முறை சம்பவங்கள் குறைந்ததை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை சிஸ்ரா மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது என்று அரசு தெரிவித்துள்ளது.

‘‘தேரா சச்சா சவுதா தலைமையகத்தினுள் நுழையும் திட்டம் ஏதும் இல்லை’’ என்று ராணுவம் தெரிவித்துள்ளது. உள்ளே ராணுவம் நுழைந்ததாக வெளியான தகவலை தொடர்ந்து இந்த விளக்கம் அளி க்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னையில் மட்டுமே ராணுவம் கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவி க்கப்பட்டுள்ளது.

மேலும், போலீசார் கூறுகையில், ‘‘மாநிலம் முழுவதும் உள்ள 98 பிரார்த்தனை மையங்களில் இருந்து லத்திகள், இரும்பு கம்பி, கோடாரி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏகே 47 துப்பாக்கி, ஆதரவாளரின் வாகனத்தில் இருந்து ஒரு கை துப்பாக்கி, மற்றொரு வாகனத்தில் இருந்து 5 கை துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது வரை 552 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரார்த்தனை மையங்களில் மேலும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய தொடர் சோதனைகள் நடந்து வருகிறது’’ என்றனர்.

ஹரியானா அரசு வக்கீல் பால்தேவ் ராஜ் மகாஜன் உயர்நீதிமன்றத்தில் கூறுகையில், ‘‘24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 79 தோட்டாக்களுடன் 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10 பெட்ரோல் குண்டுகள், ஹாக்கி மட்டைகள், இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. 8 ஃஎப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

சிஸ்ரா மாவட்டத்தில் 6 பேர் உள்பட பஞ்ச்குலா பகுதியில் மொத்தம் 36 பேர் கலவரத்தில் இறந்துள்ளனர். பல மாவட்டங்களில் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என்றும் போலீசார் தெரிவித்தனர்.