மும்பை
நித்தியானந்தா, ராம்ரஹிம், ஆஸாராம் பாபு ஆகிய அனைத்து சாமியார்களும் கிரிமினல்களே என புகழ் பெற்ற இந்தி நடிகரான ரிஷி கபூர் கூறி உள்ளார்.
தனது சிஷ்யைகளை பலாத்காரம் செய்ததாக ராம்ரஹீமின் குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. கலவரத்தில் சுமார் 36 பேர் மரணமடைந்தனர். இது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதில் புகழ் பெற்ற இந்தி நடிகர் ரிஷி கபூரும் ஒருவர்.
தனது அறிக்கையில் ரிஷி கபூர், “ராம் ரஹிம், நித்தியானந்தா, ஆஸாராம் பாபு, ராதேமா போன்ற அனைத்து சாமியார்களும் கிரிமினல்கள். இவர்கள் அனைவருமே சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள். தற்போது இதில் ஒரு கிரிமினலான ராம்ரஹிம் கைது செய்யப்பட்டதற்காக பல பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. அந்த இழப்பை ஈடு கட்ட அவருடைய ஆசிரம சொத்துக்கள் விற்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.” என கூறி உள்ளார்.
ரிஷிகபூர் இந்தியில் புகழ்பெற்ற நடிகர். அவருடைய குடும்பத்தில் அவர் தாத்தாவில் தொடர்ந்து, தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, அண்ணனின் மகள்கள், இவருடைய மகன் ஆகியோர் இந்தித் திரையுலகில் புகழ்பெற்ற நடிகர் என்பது தெரிந்ததே. இவர் மகன் ரண்பீர் கபூர் இப்போது இந்தித் திரையுலகில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.